/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டில்லியால் ஊட்டிக்கு சிக்கல்; விவசாயிகள் சோகம்
/
டில்லியால் ஊட்டிக்கு சிக்கல்; விவசாயிகள் சோகம்
ADDED : மார் 07, 2024 11:42 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு டில்லி கேரட்டுகளின் வரவால் ஊட்டி கேரட்டுகளின் விலை அதிகரிக்காமலும், மந்தமாகவும் விற்பனை ஆகின்றன. இதனால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அன்னூர் சாலையில் மிகப்பெரிய அளவில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளும் கொண்டு வருகின்றனர். சீசனை பொறுத்து சில சமயங்களில் வடமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. நீலகிரி மாவட்டம் ஊட்டி, கேத்தி, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கேரட்டுகள் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வருகின்றன. இதனிடையே டில்லி கேரட்டுகளின் வரவால், ஊட்டி கேரட்டுகளின் விலை அதிகரிக்காமலும், மந்தமாகவும் விற்பனை ஆகின்றன.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வெஜிடேபிள் சேம்பர் அப் காமர்ஸ் செயலாளர் ஹக்கீம் கூறியதாவது: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு தற்போது தினமும் டில்லியில் இருந்து கேரட்டுகள் வருகின்றன. 45 கிலோ ஒரு மூட்டை ஆகும். அப்படி 350 முதல் 500 மூட்டைகள் வருகின்றன. டில்லி கேரட்டுகள் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி கேரட்டுகள் தினமும் 3 ஆயிரம் மூட்டைகள் வருகின்றன. ஊட்டி கேரட்டுகள் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகின்றன. டில்லி கேரட்டுகள் வரவு இல்லை என்றால் ஊட்டி கேரட்டுகளின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையாகும்.
கேரளா வியாபாரிகள் பெரிதும் டில்லி கேரட்டுகளை தான் விரும்பி வாங்குகின்றனர். இதனால் ஊட்டி கேரட்டுகள் விற்பனை மந்தமாக உள்ளது.விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.
முட்டை கோஸின் விலை பல மாதங்களுக்கு பின் தற்போது தான் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.8 வரை விற்பனை ஆன நிலையில் தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை ஆகிறது. பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 35 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கேரட் விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே கேரட்டின் விலை உயராமல் விற்பனை ஆகி வந்தது. இச்சமயங்களில் ஒரு கிலோ ரூ. 100 வரை கூட விற்பனை ஆகும். ஆனால் தற்போது டில்லி கேரட்டின் வரவால் உள்ளூர் விவசாயிகளுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது, என்றனர்.-

