/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுரங்க நடைபாதை பணிகள் பாதியில் முடக்கம்: வாகன போக்குவரத்து வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
சுரங்க நடைபாதை பணிகள் பாதியில் முடக்கம்: வாகன போக்குவரத்து வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
சுரங்க நடைபாதை பணிகள் பாதியில் முடக்கம்: வாகன போக்குவரத்து வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
சுரங்க நடைபாதை பணிகள் பாதியில் முடக்கம்: வாகன போக்குவரத்து வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2025 08:53 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வடுகபாளையத்தில் சுரங்க நடைபாதை பாலப்பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டதால், அப்பகுதி புதர் மண்டி விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், போக்குவரத்து வசதிக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வடுகபாளையம் பகுதி மக்கள் வந்து செல்லும் வகையில், பாலக்காடு ரோட்டில் நடைபாதை பாலம் அமைக்க ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக கடந்த, 2023ம் ஆண்டு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சுரங்கவழி நடைபாதையாக அமைக்காமல், வாகனங்கள் சென்று வர ஏதுவாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வடுகபாளையம் ரயில் கேட் மூடப்பட்டால், சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள், சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
எனவே, அங்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு சுரங்க பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும், என வலியுறுத்தினர். எனினும், சுரங்க நடைபாதை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.
இப்பணிகள் துவங்கப்பட்ட நிலையில், வடுகபாளையம் ரயில்வே கேட்டை மூடினர். இதனால், அவ்வழியாக பொதுமக்கள் சென்று வர சிரமப்பட்டனர்.இதற்கு பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் ரயில்வே கேட் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், சுரங்க பாதை பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அவ்விடமே புதர் மண்டி விஷப்பூச்சிகளின இருப்பிடமாக மாறியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடைபாதையாக அமைக்காமல், வாகனங்கள் சென்று வரும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தினால் பயனாக இருக்கும்.
இல்லையெனில், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிவிடும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதற்கு, பாலக்காடு ரோடு மேம்பாலம் கட்டப்பட்டு, வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. வடுகபாளையம் மற்றும் பாலக்காடு ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் செல்வதற்காக சுரங்க நடைபாதை மட்டும் அமைக்கப்படும் என தெரிவித்து பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக பணிகள் முடங்கியுள்ளன. அந்த இடம் முழுவதும் புதர்கள் மண்டி விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர், மழைநீர் தேங்கி சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
சுரங்க நடைபாதைக்கு மாற்றாக வாகனங்கள் சென்று வரும் வகையில், பணிகளை துவக்கினால் பயனாக இருக்கும். வடுகபாளையம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும். இதற்காக பயன்படுத்தப்பட்ட நிதியும் வீணாகாது. இது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

