/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி நகை அடகு வைத்து மோசடி; இருவர் கைது
/
போலி நகை அடகு வைத்து மோசடி; இருவர் கைது
ADDED : நவ 14, 2025 02:06 AM

கோவை: டியூகாஸ்'ல், போலி நகைகள் அடகு வைத்து ரூ.3.50 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை துடியலுாரில், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) செயல்படுகிறது. இச்சங்கத்தில் செயல்படும் நகை அடமான பிரிவில், 2023ம் ஆண்டு, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு, ரொக்கம் பெற்றது தொடர்பான தகவல், சமீபத்தில் தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில், வெவ்வேறு முகவரியில் வசிக்கும், 16 நபர்கள் போலி நகைகளை, டியூகாஸ்' நிறுவனத்தில் அடகு வைத்து, பணம் பெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி உத்தரவின் பேரில், துறை அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மோசடி உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில், கோவை சரக துணைப்பதிவாளர் தினேஷ்குமார், பொருளாதார குற்றப் பிரிவில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று, போலி நகைகளை அடமானம் வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட சார்லஸ், 41, நகை மதிப்பீட்டாளர் கிருத்திகைராஜ், 47 ஆகியோர், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

