/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் லேப்டாப், ஐபேட் திருடிய இருவர் கைது
/
ரயிலில் லேப்டாப், ஐபேட் திருடிய இருவர் கைது
ADDED : பிப் 03, 2026 05:29 AM

பாலக்காடு: அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த, பொள்ளாச்சியைச் சேர்ந்த நபரிடம் மின்னணு சாதனங்களைத் திருடிச் சென்ற மேற்குவங்க இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 31ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு, பாலக்காடு ரயில் சந்திப்பு வந்தது. அப்போது, ரயிலில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்தவரின் ஐபேட், லேப்டாப் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பயணி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
எஸ்.ஐ., பிரவீன் தலைமையிலான ரயில்வே போலீசாரும், எஸ்.ஐ. அஜித் அசோகன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரயிலில் திருடிய இருவர் ஆலுவா பகுதிக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆலுவாவில் பதுங்கியிருந்த அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் மஹாளி, 22, மற்றும் முர்சலீம், 23, ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

