ADDED : ஆக 20, 2026 04:50 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே, சாக்கடை நீர் அடைப்பை சரிசெய்ய, சாலையின் நடுவே சுமார் 3 அடி ஆழத்தில், இரு மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது. இதுவரை மூடப்படாமல் உள்ளது. இதை சுற்றி தடுப்புகள் வைத்திருந்தாலும், இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது பெரிதாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. கனரக வாகனங்கள் பள்ளத்தை ஒட்டி செல்லும் போது, இடப்பற்றாக்குறையால், தடுப்பான்களை தட்டிவிடும் நிலை உள்ளது. தொடர்ந்து விபத்து அபாயம் மிக்க பகுதியாக இப்பள்ளம் மாறியுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பல மாதங்களாக சாக்கடை நீர் வழிந்தோடியது. இதனால் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டது. அதை சீர் செய்ய நகராட்சி ஒரு வழியாக முன்வந்தது. ஆனால், அதற்கு பின் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட முன்வரவில்லை. எப்போது மூடப்படும் என தெரியவில்லை. லாரிகள் ஓட்டி செல்லும் போது பள்ளம் பெரிதாகி அதில் லாரி சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது’ என்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளம் தோண்டப்பட்டு சாக்கடையில் உள்ள அடைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் பள்ளம் மூடப்படும்’ என்றனர்.
