/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையை சேர்ந்த இருவரிடம் ரூ. 24 லட்சம் மோசடி
/
கோவையை சேர்ந்த இருவரிடம் ரூ. 24 லட்சம் மோசடி
ADDED : ஜன 10, 2025 12:22 AM
கோவை; கோவையை சேர்ந்த இருவரிடம் ஆன்லைனில் பண மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, பீளமேடு, காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா நாராயணசாமி, 41. இவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். பங்கு சந்தையில் 'டிரேடிங்' செய்வதில் ஆர்வம் இருந்ததால், ஒரு தனியார் டிரேடில் செயலியை பயன்படுத்தி டிரேடிங் செய்து வந்தார்.
டிரேடிங் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது, அதில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அவர்கள், நரசிம்மாவை ஒரு 'வாட்ஸ் அப்' குழுவில் இணைத்துள்ளனர். அதில் 'ஸ்டாக்' வாங்குவது, விற்பது குறித்து பதிவிடப்பட்டுள்ளது. அவற்றை வாங்கி விற்கும் போது அதிக லாபம் கிடைத்துள்ளது.
அதில், ஒரு சில நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியவில்லை என நரசிம்மா 'வாட்ஸ் அப்' குழுவில் தெரிவிக்க, மோசடி நபர்கள் ஒரு செயலிக்கான 'லிங்க்'ஐ அனுப்பி, அதன் வாயிலாக வாங்க கூறியுள்ளனர். இதையடுத்து, நரசிம்மா அந்த போலியான செயலியை (நுவாமா பிரைமரி அக்கவுன்ட்) பயன்படுத்தி டிரேடிங் செய்ய துவங்கினார்.
அதற்காக, பல்வேறு தவணைகளில், ரூ 19.13 லட்சத்தை முதலீடு செய்தார். அதிலிருந்து சுமார் ரூ. 5 லட்சத்தை திருப்பி எடுத்துவிட்டார். மீதமுள்ள பணத்தை எடுக்க முயற்சித்தபோது, பணத்தை எடுக்க முடியவில்லை.
இதேபோல், போத்தனுாரை சேர்ந்த சேகின், 27 என்ற இளைஞரிடம் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளனர். அதில், ஆன்லைன் வேலை பெற, முதலீடு செய்யுமாறு தெரிவித்தனர். அதன் பின்னர், தினசரி அவர்கள் கூறும் பணிகளை செய்தால், அதற்கேற்ப லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர்.இதை நம்பி, சேகின், சுமார், ரூ. 9 லட்சத்தை மோசடி நபர்கள் அளித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். பணத்தை அனுப்பிய பிறகு மோசடி நபர்கள் சேகினின் குறுஞ்செய்தி, அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. இதையடுத்து, அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு புகார்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.