பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் வெளியேறுவதால் பாதிப்பு! குட்டை போல் தேங்கி நோய் பரவும் அபாயம்
பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் வெளியேறுவதால் பாதிப்பு! குட்டை போல் தேங்கி நோய் பரவும் அபாயம்
ADDED : நவ 11, 2026 05:04 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் பாதாளச்சாக்கடை திட்டத்தில் உள்ள பிரச்னைகளால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். அதில், இத்திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி குட்டை போல தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாளச்சாக்கடை திட்டம், 170.22 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மரப்பேட்டை பள்ளம், மாட்டுச்சந்தை, ராஜாராமன் லே -அவுட்டில் கழிவுநீர் உந்து நிலையங்களும், 18 இடங்களில் கழிவுநீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டன.
மாட்டுச்சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 11.25 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டன.
ஆனால், இத்திட்டம் துவங்கியது முதல், வீட்டு இணைப்பு வழங்குதல் வரை அனைத்திலும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அதில், வீட்டு இணைப்புக்கு அதிகப்பட்சமாக பணம் வசூலிப்பதாகவும், முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.
ஒரு சில பகுதிகளில், தனியார் ேஹாட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவுகள், கால்வாய்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வெளியேறுகிறது.
நகரின் துாய்மை பாதுகாக்கப்படும் என்ற நோக்கத்தோடு, கொண்டு வரப்பட்ட திட்டம் தற்போது, வீணாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
பாதாளச்சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே, குழிகள் புதையுண்டு விபத்துகளை ஏற்படுத்தும் இடமாக மாறியுள்ளன.
ஆள் இறங்கும் குழிகளில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி ரோட்டில் குளம் போல தேங்கி நிற்கின்றன.
அதில், பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் ரோட்டில், தனியார் பள்ளி அருகே கழிவுநீர் வெளியேறி குட்டை போல தேங்கி நிற்கிறது. இதை கடந்து தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர் கழிவுநீர் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதி, தொற்று நோய் பரப்புமிடமாக மாறி வருகிறது. இதுபோன்று பல இடங்களில் அவ்வப்போது கழிவுநீர் வழிந்து வெளியேறுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
பிரச்னைகள் ஏராளம்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாளச்சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது முதல் இதுநாள் வரை பிரச்னைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்குரிய தீர்வு தான் கிடைக்கவில்லை.
ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்தது புதுப்பிக்கப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் குழிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து தேங்குவதால் சுகாதாரம் பாதித்தது. மழைக்காலம் முடிந்ததும் இந்த பிரச்னை சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது, மழை இல்லாத சூழலிலும் ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதற்கு என்ன காரணம் சொல்லப்போகின்றனர் என தெரியவில்லை.
கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். எனவே, நகரில் நிலவும் பாதாளச்சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு காண, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
