/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியின்றி பெருகும் தள்ளுவண்டி கடைகள்
/
அனுமதியின்றி பெருகும் தள்ளுவண்டி கடைகள்
ADDED : ஜன 30, 2025 11:14 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தப்படும் தள்ளுவண்டிக் கடைகளில், சுகாதாரமின்றி உணவு தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகரில், நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட சாலைகள் உள்ளன. சமீபகாலமாக, மாலை, இரவு நேரங்களில் அனுமதியின்றி ஆங்காங்கே தற்காலிக தள்ளுவண்டிக் கடைகள் அமைத்து, தின்பண்டங்கள், சிற்றுண்டி, பிரியாணி விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, இங்கு, சுகாதாரம் மற்றும் தரமின்றி உணவு தயாரிப்பதாகவும் புகார் எழுகிறது. துறை ரீதியான அதிகாரிகளின் ஆய்வு அவசியம் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
டாஸ்மாக், எப்.எல்., 2 கடைகளை மையப்படுத்தி, அதிகப்படியான தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்த கடைகள், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நடைபாதையில் அனுமதியின்றி அமைக்கப்படுகிறது.
அங்கு, உணவு உட்கொள்ள பலரும் தங்களது வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்தும் பாதிப்படைகிறது. இத்தகைய தற்காலிக கடைகளில் போதியளவு தண்ணீர் இல்லாத நிலையில், தரமற்ற மூலப்பொருட்களைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பதும் தெரியவந்துள்ளது.
எனவே, தற்காலிக கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.