/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பின்றி புதர் மண்டிய பூங்கா; களமிறங்கி அகற்றிய மக்கள்
/
பராமரிப்பின்றி புதர் மண்டிய பூங்கா; களமிறங்கி அகற்றிய மக்கள்
பராமரிப்பின்றி புதர் மண்டிய பூங்கா; களமிறங்கி அகற்றிய மக்கள்
பராமரிப்பின்றி புதர் மண்டிய பூங்கா; களமிறங்கி அகற்றிய மக்கள்
ADDED : டிச 15, 2025 05:33 AM

பொள்ளாச்சி: சிறந்த நகராட்சிக்கான விருது நினைவு பூங்கா, பராமரிப்பின்றி புதர் மண்டி இருப்பதால், பொதுமக்களே களம் இறங்கி சுத்தம் செய்தனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு, மாநிலத்தில் சிறந்த நகராட்சிக்கான விருதினை கடந்த, 2012ம் ஆண்டு மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதற்காக அரசு சார்பில், 15 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விருதுக்காக வழங்கப்பட்ட, 15 லட்சம் ரூபாய் மற்றும், 10 லட்சம் ரூபாய் நகராட்சி நிதியுடன் மொத்தம், 25 லட்சம் ரூபாய் செலவில் விருது பெற்றதன் நினைவாக, நான்காவது வார்டில் சொர்ணபுஷ்பம் காலனியில், 50 சென்ட் பரப்பில் பூங்கா மேம்படுத்தப்பட்டது.
சுற்றுச்சுவர், இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உபகரணம் மற்றும் மூலிகை செடிகள் பெயர்கள் பதிவிடப்பட்ட கட்டமைப்புகளுக்கு நடுவே செடிகளும் நடப்பட்டன. நடைபாதையும் அமைக்கப்பட்டன.
ஆனால், முறையாக பராமரிக்கப்படாமல் இருக்கைகள் சிதிலமடைந்தன. சீசா, சறுக்கு விளையாட்டு என குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி உள்ளது. அழகுக்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளும் சிதிலமடைந்தன.
மேலும், புதர்கள் மண்டி அருகில் உள்ள குடியிருப்புகளில் விஷ பூச்சிகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களே புதரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. பயன்பாட்டில் இருந்த பூங்கா புதர் மண்டி காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
நகராட்சி சார்பில் பூங்காவில் தெருவிளக்கு அமைத்து, உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

