மேற்கு புறவழிச்சாலையில் மறியல் விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தல்
மேற்கு புறவழிச்சாலையில் மறியல் விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2026 06:03 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலையில், விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக, மொத்தம், 73.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர். பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில், ரோடு அமைக்கப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளாக நடந்த பணிகள் முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இச்சூழலில், நல்லிக்கவுண்டன்பாளையம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் இணைப்புச்சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இங்கு ரவுண்டானா மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை இல்லை.
விரக்தியடைந்த பொதுமக்கள், நேற்று நல்லிக்கவுண்டன்பாளையம் – தாளக்கரை இணைப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ., தாமோதரன், நிருபர்களிடம் கூறியதாவது:
மேற்கு புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்து, தற்போது வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதில், தாளக்கரை சந்திப்பு, கோவை ரோடு சந்திப்பு பகுதிகளில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. வாகனங்கள் திரும்ப சிரமமாக உள்ளது. எனவே, இரு இடங்களில் ரவுண்டானா அமைக்க பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
தற்போது விபத்துகள் அதிகளவு நடப்பதால் பொதுமக்கள், கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் இனியாவது கவனம் செலுத்தி விபத்துகளை தவிர்க்க உரிய வசதிகளை மேம்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
