/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றுக்குள் கழுவப்படும் வாகனங்கள்; கண்காணிப்பு இல்லாததால் மாசுபடும் நீர்
/
ஆற்றுக்குள் கழுவப்படும் வாகனங்கள்; கண்காணிப்பு இல்லாததால் மாசுபடும் நீர்
ஆற்றுக்குள் கழுவப்படும் வாகனங்கள்; கண்காணிப்பு இல்லாததால் மாசுபடும் நீர்
ஆற்றுக்குள் கழுவப்படும் வாகனங்கள்; கண்காணிப்பு இல்லாததால் மாசுபடும் நீர்
ADDED : ஜன 31, 2025 11:49 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில், வாகனங்கள் நிறுத்தி கழுவுவதால் தண்ணீர் மாசுபடுகிறது.
ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அதில், ஆழியாறு ஆற்றில், குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவது, கழிவுநீரை கலப்பது, ரசாயன மற்றும் சாயக்கழிவுகள் கலப்பது போன்றவற்றால் மாசடைகிறது.
அம்பராம்பாளையத்தில், ஆழியாறு ஆற்றில், பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதோடு, வாகனங்களை ஆற்றினுள் இறக்கி கழுவுகின்றனர். இதனால், தண்ணீர் மாசுபடும் என்பதால் தடை விதிக்கப்பட்டு, அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
தற்போது அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், ஆற்றுக்குள் வாகனங்களை கொண்டு சென்று கழுவுகின்றனர். இதனால், வாகனங்களில் உள்ள எண்ணெய் கழிவுகள் தண்ணீரில் கலக்கின்றன. அவை, எளிதில் சுத்திகரிக்க முடியாதவை மற்றும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் வாகனங்கள் கழுவ தடை விதிக்க வேண்டும்.
பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க, அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஆற்றுக்குள் வாகனங்களை நிறுத்தி கழுவுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.