/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலூர் குப்பை கிடங்கால் நரக வேதனை; அடுத்தடுத்த திட்டங்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
/
வெள்ளலூர் குப்பை கிடங்கால் நரக வேதனை; அடுத்தடுத்த திட்டங்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
வெள்ளலூர் குப்பை கிடங்கால் நரக வேதனை; அடுத்தடுத்த திட்டங்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
வெள்ளலூர் குப்பை கிடங்கால் நரக வேதனை; அடுத்தடுத்த திட்டங்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
ADDED : மார் 13, 2024 11:49 PM

கோவை : வெள்ளலுார் குப்பை கிடங்கால் சுற்றுப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடு பிரச்னையை சந்திக்கும் நிலையில், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மையம், 'பயோ காஸ்' திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது, இ-வேஸ்ட் என, தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளலுார் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டதால், மலை போல் தேங்கியுள்ளது.
இதனால், துர்நாற்றம், ஈ தொல்லை போன்ற பாதிப்புகளை அப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர். பிரச்னை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை செல்ல விசாரணையும் நடந்துவருகிறது. குப்பை கிடங்கு விஷயத்தில், மாநகராட்சியின் செயல்பாட்டில் திருப்தியில்லை எனவும் தீர்ப்பாயம் வேதனை தெரிவித்துள்ளது. பழைய குப்பை அழித்து நிலத்தை மீட்பதுடன், வெள்ளலுாருக்கு குப்பை வருவதை தடுத்து, அந்தந்த மண்டலங்களிலேயே குப்பை மேலாண்மை செய்யவும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இச்சூழலில், குப்பை கிடங்கு வளாகத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் அமைப்பதற்கும், 'பயோ காஸ்' திட்டம் செயல்படுத்தவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்புக் கூட்டுக்குழு செயலாளர் மோகன் கூறியதாவது:
வெள்ளலுார் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பையால், ஏற்கனவே ஏராளமான துன்பங்களை சந்திக்கிறோம். கிடங்கு வளாகத்தில் கோழி கழிவு மையமும், அருகே மாடு அறுவை மையமும் செயல்படும் நிலையில், தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படுவது பேரதிர்ச்சிக்குரியது.
குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு, காற்று, நிலத்தடி நீர் மாசடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதிளாக போத்தனுார், வெள்ளலுார் மாறிவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வெள்ளலுார் கிடங்கில் புதிதாக குப்பை கொட்டக்கூடாது; ஆனால், கொட்டப்படுகிறது.
'பயோ மைனிங்' முறையில் பழைய குப்பையை அழித்து, நிலத்தை மீட்டு சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'பயோ காஸ்' திட்டத்தை, வெள்ளலுார் குப்பை கிடங்கில் அமைக்கக்கூடாது; மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். ஐந்து மண்டலங்களில் இடங்கள் தேர்வு செய்து, அங்கேயே திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

