/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெங்கடேச பெருமாள் சுவாமி திருவீதி உலா
/
வெங்கடேச பெருமாள் சுவாமி திருவீதி உலா
ADDED : செப் 21, 2025 11:14 PM

அன்னுார்; பு ரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் சுவாமி திருவீதி உலா நடந்தது.
மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து பூமிநாளா நாயகி சமேத திருவேங்கட பெருமாள் கோவில் குழுவின் பஜனை மதியம் வரை நடந்தது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக வெங்கடேச பெருமாள் தேரோடும் வீதி வழியாக சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். கோவை, அவிநாசி, புளியம்பட்டி மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
வரும் 27ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு அச்சம் பாளையம் செல்வ விநாயகர் குழுவின் இசை கச்சேரி மதியம் வரை நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.
சூலுார் புரட்டாசி மாத அமாவாசையை ஒட்டி, சூலுார் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில், அம்மன் கோவில்கள், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில், பாப்பம்பட்டி பிரிவு மகாலட்சுமி, கருப்பராயன் கோவில், கன்னிமார் உள்ளிட்ட குலதெய்வ கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நேற்று காலை நடந்தது. இதில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பாப்பம்பட்டி மகாலட்சுமி கோவிலில், 18 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பூஜாரி பேச்சிமுத்து, நிர்வாகி சிவசாமி, விஜயகுமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.