UPDATED : அக் 13, 2026 05:59 PM
ADDED : அக் 13, 2026 05:54 PM
மேட்டுப்பாளையம்: தோலம்பாளையம் புதூரில் வருகிற 15ம் தேதி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து, தடுப்பூசி போட்டுச் செல்லும்படி கால்நடை டாக்டர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கால்நடை மருத்துவமனை சார்பில் கிராமங்களில் முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன இது குறித்து மேட்டுப்பாளையம் கால்நடை டாக்டர் அறுவை சிகிச்சை நிபுணர் சரவணன் கூறியதாவது;
வருகிற 15ம் தேதி காரமடை அருகே தோலம்பாளையம் புதூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. மூன்று டாக்டர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், இந்த முகாமில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆடுகளுக்கும், கன்றுகளுக்கும் குடற்புழு நீக்கம் சொட்டு மருந்து வழங்கப்படும். மாடுகளுக்கு அம்மை தடுப்பூசியும் சினை ஊசியும் போடப்படும். முகாமுக்கு வரும்போது விவசாயிகள் ஆதார் அட்டையை அவசியம் எடுத்து வர வேண்டும். மேலும் நன்கு வளர்த்த கன்றுகளுக்கு பரிசும் வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் கூறினார்.
