/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
/
அரசு பஸ்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
ADDED : அக் 17, 2025 11:29 PM
அன்னுார்: கஞ்சப்பள்ளி பிரிவில் அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
அன்னுாரில் இருந்து அவிநாசி செல்லும் பாதையில், கஞ்சப்பள்ளி பிரிவு உள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் இங்கு நிறுத்துவதில்லை என பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். இதையடுத்து இரு மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கஞ்சப்பள்ளி பிரிவை வேண்டுதல் பஸ் ஸ்டாப்பாக அறிவித்தது. அரசு மற்றும் தனியார் பஸ் நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியது, அதன் பிறகும் பெரும்பாலான அரசு பஸ்கள் நிறுத்துவதில்லை.
நேற்று காலை 7:15 மணியளவில் அங்கு வந்த பொதுமக்கள் திருப்பூர் செல்வதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்தும் எந்த பஸ்சும் நிறுத்தவில்லை. இதனால் ஆவேசம் அடைந்து சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகளை எடுத்து சாலையில் குறுக்கே வைத்தனர்.
அப்போது அந்த வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற மூன்று அரசு பஸ்களை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வந்து பேச்சு நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில், '10 எக்ஸ்பிரஸ் என்று போர்டு வைத்த பஸ்கள் வந்த பிறகு ஒரு சாதாரண அரசு பஸ் வருகிறது. எக்ஸ்பிரஸ் பஸ்கள் நிறுத்துவதில்லை. அதில் கட்டணம் அதிகம். சாதாரண பஸ்சுக்காக மணி கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது' என்றனர். போலீசார், 'இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம்,' என்று சொல்லி, சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் பேரிகார்டுகளை அகற்றிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 15 நிமிடம் அன்னுார்-அவிநாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.