/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களுக்கும் தேவை 'மூன்றாவது கண்!' கேமராக்கள் பொருத்த வலியுறுத்தல்
/
கிராமங்களுக்கும் தேவை 'மூன்றாவது கண்!' கேமராக்கள் பொருத்த வலியுறுத்தல்
கிராமங்களுக்கும் தேவை 'மூன்றாவது கண்!' கேமராக்கள் பொருத்த வலியுறுத்தல்
கிராமங்களுக்கும் தேவை 'மூன்றாவது கண்!' கேமராக்கள் பொருத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2025 09:07 PM
குடிமங்கலம்; கிராமங்களில் திருட்டுகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ஊரக வளர்ச்சித்துறையால், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நகர்புறங்களில் வணிக நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கம், நகராட்சி மற்றும் போலீசாரால் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.இந்த கேமராக்கள், குற்றத்தடுப்பு மற்றும் திருட்டு சம்பவங்களின் போது குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்தகைய கேமராக்கள், கிராமப்புறங்களில் எந்த துறை யினராலும் பொருத்தப்படுவதில்லை; நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் தற்போது குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள், பூட்டிய கடைகளில் திருட்டு என நடந்த சம்பவங்கள் தற்போது, அரசுக்கு சொந்தமான பொருட்களை திருடும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் மட்டும், மின்வாரியத்தின் நான்கு டிரான்ஸ்பார்மர்களின் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
அரசுக்குச்சொந்தமான, மின்வினியோகத்துக்கான டிரான்ஸ்பார்மர்களே திருடப்படுவது கிராமங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளது. விளைநிலங்களிலும் மின்மோட்டார்கள், கேபிள் வயர்கள் திருடுவது அதிகரித்துள்ளது.
காற்றாலைகள் அதிகம் நிறுவப்பட்டுள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில், மின்வினியோகம் சார்ந்த கட்டமைப்புகள் அதிகளவு உள்ளன. இவற்றை குறி வைத்து ஒரு கும்பல் திருட துவங்கியுள்ளது அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமங்களில் நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க, நகர்ப்புறங்களை போல அப்பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியமாகியுள்ளது.சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும், பாசன சபையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மனு கொடுத்துள்ளனர்.