/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்ட் அருகே விதிமீறல்: போக்குவரத்து பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்ட் அருகே விதிமீறல்: போக்குவரத்து பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் அருகே விதிமீறல்: போக்குவரத்து பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் அருகே விதிமீறல்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 07, 2025 11:01 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில், பயணியரை ஏற்றுவதற்காக பஸ்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
பொள்ளாச்சியில் இருந்து, கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கோவை செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்ததும், ரோட்டிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டில் இருந்து நேரத்துக்கு கிளம்பும் சில தனியார் பஸ்கள், ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். மேலும், பயணியர் பஸ்சை பிடிக்கும் அவசரத்தில் வேகமாக ஓடிச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
விதிமுறை மீறி இதுபோன்று நிறுத்தி பயணியரை ஏற்றுவதால், வாகன நெரிசல் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. மேலும், அரசு பஸ்களும், பயணியரை ரவுண்டானாக்கள் திருப்பம், பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதிகளில் நிறுத்தி இறக்குகின்றனர்.
பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், பணிமனைக்கு செல்லும் அவசரத்தில் இதுபோன்று செய்வதாக கூறப்படுகிறது. இதனால், பின்னால் வரும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வீண் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, பஸ் ஸ்டாண்ட் உள்ளே மட்டும் பஸ்களை நிறுத்தி பயணியரை ஏற்றவும், இறக்கவும் அறிவுறுத்த வேண்டும். பஸ் ஸ்டாப்புகள் இல்லாத இடங்களில், நெரிசல் மிகுந்த இடங்களில் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே பஸ்சை நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்க வேண்டாம் என, பஸ் ஊழியர்களிடம் தினமும் அறிவுறுத்துகிறோம். ஆனால், சில பஸ் ஊழியர்கள் அலட்சியாக செயல்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. விதிமீறும் பஸ்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.