/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறினால் சிக்கல்! நகரப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு எச்சரிக்கை; அபராதம் விதிக்கப்படுமென போலீசார் அறிவிப்பு
/
விதிமீறினால் சிக்கல்! நகரப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு எச்சரிக்கை; அபராதம் விதிக்கப்படுமென போலீசார் அறிவிப்பு
விதிமீறினால் சிக்கல்! நகரப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு எச்சரிக்கை; அபராதம் விதிக்கப்படுமென போலீசார் அறிவிப்பு
விதிமீறினால் சிக்கல்! நகரப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு எச்சரிக்கை; அபராதம் விதிக்கப்படுமென போலீசார் அறிவிப்பு
ADDED : ஜூலை 09, 2025 09:57 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, நகர பகுதியில் முக்கிய ரோடுகளில், கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என அறிவித்து, அபராதம் விதிப்பதாக போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு, தென்னை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்தும், பணிக்காக இந்த பகுதிக்கு வருகின்றனர். அதேபோன்று, பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர்.
இதனால், பொள்ளாச்சி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக மாறி வருகிறது. போக்குவரத்து விதிமீறல் சம்பவங்களால் நெரிசல் அதிகரித்து வருகிறது.
மேலும், நியூஸ்கீம் ரோடு, கடை வீதி, ராஜாமில் ரோடு, சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு பகுதிகளில் வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் வாகனங்களை, ரோட்டிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், 'பீக் ஹவர்சில்' நகருக்குள் வர வேண்டாம் என்ற தடையை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், ரோட்டிலேயே நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், நகரத்தில் உள்ள குடியிருப்பு ரோடுகள், ஒரு வழிப்பாதை வழியாகவும், கனரக சரக்கு வாகனங்கள் செல்வதால் நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதி, ஐயப்பன் கோவில் ரோடு, ராஜாமில் ரோடு உள்ளிட்ட ரோடுகளுக்கு, 'கட்' ரோடுகள் வழியாக சரக்கு வாகனங்கள் வரும் போது, எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
இது குறித்து, சப் - கலெக்டர் அலுவலகத்திலும் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார், ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது, இவ்வழியாக சரக்கு, கனரக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் செல்லக்கூடாது என, ஆங்காங்கே பிளக்ஸ் வைத்துள்ளனர். அதில், கனரக, சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை; 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கூறியதாவது:
கனரக, சரக்கு வாகனங்கள் விதிமுறைகளை மீறி நகருக்குள் வரும் போது, போலீசார் வழக்குப்பதிவு செய்வர், நெரிசல் இல்லாமல் போகலாம் என, 'கட்' ரோடுகள் வழியாக செல்கின்றனர்.
அதில், நகராட்சி அலுவலகம் எதிரே வெங்கடேசா காலனி செல்லும் ரோடு வழியாக, கோவை ரோட்டுக்கு செல்கின்றனர். கோவை ரோட்டில் இருந்து பாலக்காடு ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷன் அருகே திரும்பும் போது நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், பல்லடம் ரோட்டில் மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து கோவை ரோட்டுக்கும், கோவை ரோட்டில் இருந்து மகாலிங்கபுரம் வழியாக பல்லடம், உடுமலைக்கும் செல்கின்றனர். ராஜாமில் ரோட்டிலும் இதே போன்று விதிமுறை மீறல்கள் நடக்கின்றன.
இதனால், விபத்துகளும், நெரிசலும் ஏற்படுவதால் கனரக, சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது.
நகராட்சி அலுவலக ரோடு, ராஜாமில் ரோடு, மகாலிங்கபுரம் ஆர்ச் மற்றும் முக்கிய ரோடுகளின் வழியாக, கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
விதிமுறை மீறி வாகனங்கள் நுழைந்தால், 500 ரூபாய், விதிமுறையை மீறியதற்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வழக்குப்பதிவும் செய்யப்படும். தேசிய, மாநில நெடுஞ்சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.