/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் விசு புண்ணிய காலம் வைபவம்
/
அரங்கநாதர் கோவிலில் விசு புண்ணிய காலம் வைபவம்
ADDED : அக் 17, 2024 11:36 PM

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத கடைசி நாளை முன்னிட்டு விசு புண்ணிய காலம் வைபவம் கொண்டாடப்பட்டது.
காரமடை அரங்கநாதர் கோவில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமை விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன. புரட்டாசி மாதத்தின் கடைசி நாளான நேற்று, கோவிலில் விசு புண்ணிய காலம் வைபவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
அப்போது ஸ்ரீ சுக்தம், நாராயண சுக்தம் உள்ளிட்ட பஞ்ச சுக்தங்கள் வாசிக்கப்பட்டன. பின்பு திவ்ய பிரபந்தத்திலிருந்து நீராட்டம் பாசுரங்கள் சேவிக்கப்பட்டன. தொடர்ந்து கால சந்தி பூஜை, சாற்று முறை சேவித்த பின், மங்கள ஆரத்தி எடுத்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.