தவறான தகவலை பதிவேற்றினால் நடவடிக்கை: இ-சேவை மையங்களுக்கு எச்சரிக்கை
தவறான தகவலை பதிவேற்றினால் நடவடிக்கை: இ-சேவை மையங்களுக்கு எச்சரிக்கை
UPDATED : ஜூலை 16, 2026 11:04 PM
ADDED : ஜூலை 16, 2026 07:14 PM
கோவை:ஆவணங்களை சரிபார்க்காமல், தவறான தகவல்களை பதிவேற்றும் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், புதிய ரேஷன் கார்டு, மின்கட்டணம் செலுத்துதல் உள்பட 92 வகையான சேவைகள் ஆன்லைன் வழியாக வழங்கப்படுகின்றன.
மக்கள் எளிதில் சேவைகளை பெற, எல்காட் கீழ் அனைத்து தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையம் செயல்படுகிறது. அதேநேரத்தில், சில தனியார் மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஆதார் பெயர் மாற்ற ரூ.2,500 வரையும், முகவரி மாற்ற ரூ.600 வரையும், சாதிச் சான்றிதழ் விண்ணப்பத்திற்கு ரூ.500 வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சில ஜெராக்ஸ் கடைகளில் இ-சேவை என்ற பெயர்ப் பலகையை வைத்து, விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிப்பதும், அரசு அதிகாரிகளிடம் பேசி பணியை விரைவாக முடித்து தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்களும் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் உள்ள பழைய சிஸ்டம் முறைகள் ஒவ்வொன்றாக ஒழுங்கு படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இ-சேவை மையங்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இ-சேவை மையங்களில் பொதுமக்கள் வழங்கும் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து, அவற்றில் உள்ள விவரங்களை துல்லியமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மேலும், அரசு நிர்ணயித்துள்ள ரூ.60 மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும். கட்டண விவரங்களை தகவல் பலகையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும். அதேபோல், இ-சேவை மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
