/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீரும், தண்ணீர் கேனும் ரொம்ப முக்கியம்! தயாரிப்பு தேதி பார்க்கணும்
/
தண்ணீரும், தண்ணீர் கேனும் ரொம்ப முக்கியம்! தயாரிப்பு தேதி பார்க்கணும்
தண்ணீரும், தண்ணீர் கேனும் ரொம்ப முக்கியம்! தயாரிப்பு தேதி பார்க்கணும்
தண்ணீரும், தண்ணீர் கேனும் ரொம்ப முக்கியம்! தயாரிப்பு தேதி பார்க்கணும்
ADDED : மே 31, 2025 04:53 AM

கோவை : பிற உணவு பொருட்களை போன்று, பொதுமக்கள் குடிநீர் கேன், தண்ணீர் பாட்டில்களிலும் தயாரிப்பு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை கட்டாயம் பார்க்கவேண்டும். முறையாக வினியோகம் செய்யாத தண்ணீர் வாயிலாக, எலும்பு உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில், 76 குடிநீர் தயாரிப்பு யூனிட்டுகள் செயல்படுகின்றன. கேன்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்யும் போது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால், நிறுவனங்கள் பல விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இது போன்ற நிறுவனங்களின் மீது, நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார், கோவை மாவட்டத்தின் புதிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா.
அவர் கூறியதாவது:
தண்ணீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதுவும் நம் உடலுக்குள் செல்லும் உணவு போன்றதுதான்.
ஆகவே, பிற உணவு பொருட்களை போன்று, பொதுமக்கள் கேன் குடிநீர், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களிலும் தயாரிப்பு தேதி, மூடிகளின் மேல் கட்டாயம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தவிர, 85 சதவீதம் வெளிப்படையாக தெரியும் வகையில் தரமான கேன்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஸ்டிக்கர் நிறுவனத்தின் பெயர், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விபரங்கள், அனைத்தும் தெளிவாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
தண்ணீர் நிரப்புபவர்கள் கைகளில் உறை அணிவது உட்பட, அனைத்தும் சுகாதாரமான முறையில் செயல்படுத்த வேண்டும். தண்ணீரில், டி.டி.எஸ்., அளவு 75 மி.கிராம் முதல் 500 மி. கிராம் வரை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
சுத்திகரிக்கும் போது தண்ணீரில் உள்ள தாதுக்கள் வெளியேறிவிடுகின்றன. இதனால், விதிமுறைகளின் படி, மெக்னீசியம், கால்சியம் சத்துக்களை கலக்க வேண்டும். இதன் காரணமாகவே தண்ணீரின் சுவை மாறியிருப்பதை பொதுமக்கள் உணர்கின்றனர்; இது இயல்பே.
அதே போன்று, மூடப்பட்ட வாகனங்களில் மட்டுமே கேன்களை எடுத்துச்சென்று வினியோகிக்க வேண்டும். இந்நிறுவனங்கள், சுத்திகரிக்கப்பட்டு மீதமுள்ள தண்ணீரை என்ன செய்கின்றனர் என்ற பதிவையும் பராமரிக்க வேண்டும். ஆர்.ஓ., மினரல் வாட்டர் என்ற பெயரில், லாரிகளில் தண்ணீர் வினியோகிக்க கூடாது.
கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூட்டம் நடத்தி, அனைத்து விதிமுறைகளும் விளக்கப்படும். அதன் பின்னரும் விதிமீறல் தொடர்ந்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒடுங்கிய, சுகாதாரம் இல்லாத, முறையான ஸ்டிக்கர் ஒட்டாத, கேன்கள் வினியோகம் செய்தால், புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.