/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாசனத்துக்கு நீர் திறப்பால் ஆழியாறில்... நீர்மட்டம் சரியுது!: பரம்பிக்குளத்தில் இருந்து வழங்க கோரிக்கை
/
பாசனத்துக்கு நீர் திறப்பால் ஆழியாறில்... நீர்மட்டம் சரியுது!: பரம்பிக்குளத்தில் இருந்து வழங்க கோரிக்கை
பாசனத்துக்கு நீர் திறப்பால் ஆழியாறில்... நீர்மட்டம் சரியுது!: பரம்பிக்குளத்தில் இருந்து வழங்க கோரிக்கை
பாசனத்துக்கு நீர் திறப்பால் ஆழியாறில்... நீர்மட்டம் சரியுது!: பரம்பிக்குளத்தில் இருந்து வழங்க கோரிக்கை
ADDED : பிப் 26, 2026 06:03 AM

பொள்ளாச்சி: 'ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தடையின்றி நீர் வழங்க, பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறு அணைக்கு நீரை வழங்க வேண்டும்,' என, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆழியாறு பாசனப்பகுதிகளில், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக் காரன்புதுார், சேத்துமடை, ஆழியாறு பீடர் கால்வாய்களில், மொத்தம் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாசனத்துக்கு கிடைக்கும் தண்ணீரை நம்பி, வேளாண்துறையின் பரிந்துரையின்படி, விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் பாசனத்துக்கு, 'அ' மண்டலம், 'ஆ' மண்டலம் என பிரிக்கப்பட்டு நீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், பருவமழை கை கொடுத்ததால், கடந்த சில மாதங்களாக அணை முழு கொள்ளளவில் காட்சியளித்தது. கால்வாய்கள் துார்வாரப்படாததால், தண்ணீர் திறப்பு காலதாமதமாகியது. முதல்வர் அறிவித்த நிதி தற்போது ஒதுக்கப்பட்டதையடுத்து, கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, கடந்த மாதம், 2ம் தேதி அரசு உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆழியாறு படுகை, பொள்ளாச்சி கால்வாய், 'ஆ' மண்டலம், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், 'அ' மண்டலம், ஆழியாறு ஊட்டுக்கால்வாய், 'ஆ' மண்டலம், சேத்துமடை கால்வாய், 'ஆ' மண்டலம் பாசன பகுதிகளில், 22,332 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2ம் தேதி முதல் மே மாதம், 17ம் தேதி வரை மொத்தம், 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு, ஆழியாறு அணையில் இருந்து, 2,142 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும், சமமட்ட கால்வாயில், 592 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் என, மொத்தம், 2,734 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் பாசனத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில், நீர்மட்டம் சரிந்து வருகிறது. புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தடையின்றி நீர் வழங்க, பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:
ஆழியாறு அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2,734 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசாணை பெற்று, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. அதன்படி, ஆழியாறு அணையில் இருந்து இதுவரை, 682 மில்லியன் கனஅடி நீரை பயன்படுத்தி உள்ளோம். இன்னும், 1,460 மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டும். இந்நிலையில், ஆழியாறு அணையில் நீர் இருப்பு, 1,300 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது.
எனவே, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தடையில்லாமல் நீர் வழங்க வேண்டும். இதற்கு ஏதுவாக பரம்பிக்குளம் அணையில் இருந்து உடனடியாக ஆழியாறு அணைக்கு நீர் வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரிடம் கடந்த மாதம் வலியுறுத்திய போது, திருமூர்த்திக்கு நீர் செல்வதால் இடையில் இறக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுவரை நீர் வழங்காததால், பிரதான கால்வாய்களில் நீர் அழுத்தம் குறைவதால், கடைமடைக்கு நீர் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறு அணைக்கு நீர் வழங்க வேண்டும். இது குறித்து கண்காணிப்பு பொறியாளரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.

