ஒரே நேரத்தில் 3 ரோடுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
ஒரே நேரத்தில் 3 ரோடுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
UPDATED : ஜூலை 23, 2026 09:00 PM
ADDED : ஜூலை 23, 2026 08:32 PM
கோவை: மாநகராட்சியில் 60 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட்க்குள் முடித்து, செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குழாய் பதிக்க அனுமதி கிடைக்காமல் இருந்ததால், தி.மு.க. ஆட்சியில் இழுபறியாகவே இருந்தது. அனுமதி கிடைத்ததால், ஒரே நேரத்தில் மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு என 3 முக்கிய சாலைகளிலும் குழாய் பதிக்க உள்ளனர்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் முருகன் மில் முதல் ஐ.டி.ஐ. வரை 5 கி.மீ. திருச்சி ரோட்டில் ஒண்டிப்புதுார் முதல் ஒப்பணக்கார வீதி போத்தீஸ் சந்திப்பு வரை 8 கி.மீ. அவிநாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோயில் முதல் பி.எஸ்.ஜி. கலை கல்லுாரி வரை 13 கி.மீ. குழாய் பதிக்க வேண்டும்.
இவ்வேலையை (24ம் தேதி) துவக்கி, ஆக. 31க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க, மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, 'மூன்று ரோட்டிலும் ஒரே நாளில் 10-12 இடங்களில் குழாய் பதிக்கப்படும். 10 குழுக்கள் வேலை செய்ய உள்ளன. கூடுதலாக 5 குழுக்கள் அமைக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுவர். அனைத்து இடங்களிலும் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு விட்டன. பாரதி பார்க்கில் கட்டியுள்ள தொட்டியில் தண்ணீரை தேக்கி, சோதனை முறையில் இயக்கிப் பார்க்கிறோம்' என்றனர்.
