ADDED : ஜூன் 19, 2025 07:37 AM

அஜய், பொள்ளாச்சி: ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், நான்கு தலைமுறையாக வசிக்கிறோம். இங்கு, 2019ல் அவசரகதியில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், எங்கள் தெருவில் முழுமையாக செயல்படுத்தவில்லை.கழிவுநீர் சரியான முறையில் வெளியேறாமல் சாக்கடை கால்வாயில் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இத்திட்டம் முறையாக செயல்படுத்தவில்லையெனில் தாழ்வாக உள்ள குடியிருப்பு பகுதிகளின் நிலை மோசமாகிவிடும். பாதாள சாக்கடை திட்டத்தால், மக்கள் பாதித்துள்ள நிலையில், குறைகளை சரி செய்ய வேண்டும்.
மாரியம்மாள், பொள்ளாச்சி: பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. பாதாள சாக்கடை திட்ட குழாய் உடைந்து கழிவுநீர் நேரடியாக கால்வாயில் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.நகரில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறுவதால் பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது. திட்டத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
பாலதண்டபாணி, உடுமலை: பாதாளச்சாக்கடை குழாய் அடைப்பை அகற்ற, தாமதமானால், கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அடைப்பு மற்றும் இதர புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகிறது. நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதால், குடியிருப்புகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள பொதுக்கழிப்பிடங்களுக்கு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமல், கழிவு நீரை திறந்தவெளி சாக்கடையில் விடுகின்றனர். பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், சிறப்பு பணியாளர்கள் குழு அமைப்பது அவசியமாகும்.
பஞ்சலிங்கம், உடுமலை: முக்கிய ரோடுகளில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள் ரோட்டை விட உயரமாக உள்ளன. பல இடங்களில் மூடிகள் உடைந்து உள்ளதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது. சில இடங்களில் மூடிகளின் கம்பி பெயர்ந்து, நடந்து செல்பவர்களை பதம் பார்க்கிறது. பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, நகரின் சுகாதாரம் மேம்படும். புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணை நகராட்சி வெளியிட வேண்டும்.