/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அவுட்சோர்சிங்' பணியாளர் நியமனம் என்னாச்சு! கிடப்பில் போடப்பட்டதால் பள்ளிகளில் பாதிப்பு
/
'அவுட்சோர்சிங்' பணியாளர் நியமனம் என்னாச்சு! கிடப்பில் போடப்பட்டதால் பள்ளிகளில் பாதிப்பு
'அவுட்சோர்சிங்' பணியாளர் நியமனம் என்னாச்சு! கிடப்பில் போடப்பட்டதால் பள்ளிகளில் பாதிப்பு
'அவுட்சோர்சிங்' பணியாளர் நியமனம் என்னாச்சு! கிடப்பில் போடப்பட்டதால் பள்ளிகளில் பாதிப்பு
ADDED : செப் 30, 2024 11:05 PM
பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக 'அவுட்சோர்சிங்' வாயிலாக துாய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படும் திட்டம் கிடப்பில் உள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வாயிலாக பணிபுரியும் இவர்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்பு பொது நிதியில் இருந்து, மாத சம்பளமும், கழிப்பறைகளை சுத்தம் செய்தவற்கான மூலப்பொருட்களை வாங்கிக் கொள்ளவும் உரிய தொகை ஒதுக்கப்படுகிறது.
அதன்படி, தொடக்கப் பள்ளிக்கு ஒரு துாய்மைப் பணியாளருக்கு, 700 ரூபாய், மூலப்பொருட்கள் வாங்க, 300 என, மாதம் 1,000 ரூபாய்; நடுநிலைப் பள்ளிகளுக்கு 1,500 ரூபாய், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 2,250 ரூபாய், மேல்நிலைப்பள்ளிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அவ்வாறு இருந்தும், பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், குறைந்த சம்பளத்தை சுட்டிக் காட்டி, எவரும் துாய்மை பணி மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதும் கிடையாது.
அதனால், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக 'அவுட்சோர்சிங்' வாயிலாக துாய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைப்படும் துாய்மைப் பணியாளர்கள் விபரத்தை அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து, இது தொடர்பான தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை, துாய்மைப் பணியாளர்கள் நியமனத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பல பள்ளிகளில் துாய்மைப் பணி மேற்கொள்ள ஆட்கள் வராததால், கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன. இதனால், மாணவியர் அதிகளவில் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
தலைமையாசிரியர்களே துாய்மைப் பணியாளர்களுக்கு சொந்த பணத்தை சம்பளமாக வழங்க வேண்டியுள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக, 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டால், அவர்களுக்கான சம்பளம் உயர்த்தி வழங்கப்படும். பணியாளர்களும் தொய்வின்றி பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவர்.
வீடுதோறும் தனிநபர் கழிப்பறை வசதியை ஏற்படுத்த முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், பள்ளிகள் மீது கவனம் செலுத்தி, இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.