/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் உயர்கல்வி நிலைபாடு என்ன? சான்று பெறும்போதே அறிய நடவடிக்கை
/
மாணவர்கள் உயர்கல்வி நிலைபாடு என்ன? சான்று பெறும்போதே அறிய நடவடிக்கை
மாணவர்கள் உயர்கல்வி நிலைபாடு என்ன? சான்று பெறும்போதே அறிய நடவடிக்கை
மாணவர்கள் உயர்கல்வி நிலைபாடு என்ன? சான்று பெறும்போதே அறிய நடவடிக்கை
ADDED : மே 08, 2025 07:31 AM

பொள்ளாச்சி : தமிழகத்தில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும், உயர்கல்வி பயில்வதை உறுதிப்படுத்த வேண்டும் என, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, இன்று, தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்வி பயில்வதற்கு, அவரவர் படித்த பள்ளிக்குச் சென்று, மாற்றுச் சான்று, தற்காலிக மதிப்பெண் சான்று, நன்னடத்தை மற்றும் வருகை சான்று உள்ளிட்டவைகளை தலைமையாசிரியர் கையொப்பம் இட்டு பெறுவர்.
அப்போது, மாணவர்கள், எந்த கல்லுாரியில் சேர உள்ளனர் என்ற விபரத்தை கேட்டறியவும், அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட விபரங்களைப் பதிவு செய்து கொள்ளவும் பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 10 நாட்கள் கழித்து, ஒவ்வொரு மாணவர்களும் கல்லுாரியில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதுடன், கல்லுாரியில் சேராத மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கமாக, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் நீங்கலாக பிற ஏதேனும் ஒரு கல்லுாரியில் சேரும்போது, அவர்களின் 'எமிஸ்' எண் 'எடிட்' செய்யப்பட்டு, 'உமிஸ்' (University Management Information System) எண்ணாக மாற்றப்படும். அதன் வாயிலாக, மாணவர்கள், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனரா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதில், உயர்கல்வி பயிலாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்களைக் கண்டறிதல், ஆசிரியர்கள் இடையே ஆர்வமின்மை போன்ற காரணங்களால் சிக்கல் நீடித்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, தற்காலிக மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்று பெற முற்படும்போதே, அவர்களின் நிலைபாட்டை கண்டறிய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்வாயிலாக, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை எளிதில் கண்டறிந்து, அருகில் உள்ள ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கலைக் கல்லுாரி களில் சேர்க்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.

