/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலம் கட்டும் வாக்குறுதி என்னாச்சு?
/
பாலம் கட்டும் வாக்குறுதி என்னாச்சு?
ADDED : ஜன 21, 2024 11:32 PM
குடிமங்கலம்;தரைமட்ட பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஒருவர் உயிரிழந்து, இரண்டு ஆண்டுகளாகியும், பாலம் கட்டாமல், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட மக்கள் தயாராகி வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் இருந்து வாகத்தொழுவு செல்ல, கிராம இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டில், பல்வேறு கிராம மழை நீர் ஓடைகள் ஒருங்கிணைந்து, தண்ணீர் செல்லும் உப்பாறு ஓடை அமைந்துள்ளது.
கடந்த, 2021, நவ., 18ல், வடகிழக்கு பருவமழை சீசனில், ஓடையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவ்விடத்தில் பாலம் இல்லாத நிலையில், ஆட்டோவில், ஓடையை கடக்க முயன்ற, இருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதில், ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்துக்கு பிறகு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், அவ்விடத்தில், பாலம் கட்டப்படும் என உறுதியளித்து, அதற்கான அளவீடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
ஒன்றிய பொது நிதி அல்லது நபார்டு சிறப்பு நிதி உள்ளிட்ட நிதி திட்டங்களின் கீழ், பாலம் கட்டப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பாலம் கட்டப்படவில்லை.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கிராம இணைப்பு ரோட்டில், பாலம் இல்லாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்பு ஏற்பட்ட போது, ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, பாலம் கட்டுமான பணிகளை துவக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும்' என்றார்.