/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவலை, பயம், துக்கத்தில் இருந்து விடுபட வழி எது?
/
கவலை, பயம், துக்கத்தில் இருந்து விடுபட வழி எது?
ADDED : செப் 30, 2024 04:50 AM

கோவை : கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ராம்நகரில் உள்ள கோதண்டராமர் கோவிலில், 'சந்தோஷம் அளித்திடும் அருள்' என்ற, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீகிருஷ்ணா பேசியதாவது:
பொதுவாக கவலை, துக்கம், பயம் போன்ற உணர்வுகளால் தான், மனிதர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதில் இருந்து விடுபடுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
இதை பற்றி நன்றாக அறிந்த ஞானிகள், இந்த பிரச்னைகள் அனைத்துக்கும் ஆணிவேராக இருப்பது, நான் என்ற அகங்காரமும், அறியாமையும் தான் என்கின்றனர்.
அதை நீக்கினால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். மனதில் ஞானம் தோன்றினால் போதும்; மற்றவை எல்லாம் மறைந்து விடும் என்கின்றனர்.
ஒரு அறையில் இருக்கும் இருளை, 'போ போ' என்றால் போகாது. அதை போக்க, ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதனால் அலைபாயும் மனதை நிலைநிறுத்தவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், ஞானத்தை கண்டுணர வேண்டும்.
ஞானத்தை அறிந்து கொண்டால், உனக்குள் இருக்கும் இருள் நீங்கி, ஒளி வந்துவிடும். இதைதான் ரமண மகரிஷி, அக்சர மணமாலையில் விளக்குகிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.

