/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் தீபாவளி போனஸ் எப்போது? தொழில் நிறுவனங்கள் மவுனம்; தொழிலாளர்கள் ஆர்வம்
/
கோவையில் தீபாவளி போனஸ் எப்போது? தொழில் நிறுவனங்கள் மவுனம்; தொழிலாளர்கள் ஆர்வம்
கோவையில் தீபாவளி போனஸ் எப்போது? தொழில் நிறுவனங்கள் மவுனம்; தொழிலாளர்கள் ஆர்வம்
கோவையில் தீபாவளி போனஸ் எப்போது? தொழில் நிறுவனங்கள் மவுனம்; தொழிலாளர்கள் ஆர்வம்
ADDED : அக் 21, 2024 04:18 AM
கோவை, : தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கோவையில் பெரும்பாலான நிறுவனங்கள் 'போனஸ்' குறித்து மவுனம் காக்கின்றன. குறைந்தபட்ச போனஸ் தொகையாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், தொழிலாளர்கள் உள்ளனர்.
வழக்கமாக தீபாவளி துவங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, போனஸ் தொடர்பான கோரிக்கைகள், தொழிலாளர்கள் தரப்பில் இருந்து வலுவாக முன்வைக்கப்படும். உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று, கோவை தொழில்துறையையும் மட்டும் விட்டு வைத்துவிடுமா என்ன?
பெரும் நெருக்கடியில் இருந்து சில நிறுவனங்கள் மீண்டு வந்துள்ளன. சில நிறுவனங்கள் மீண்டு வருகின்றன. ஜி.எஸ்.டி., மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு போன்றவை தொழில்துறையை, தள்ளாட்டத்தில் வைத்திருக்கின்றன.
இந்த சூழலில், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியாமல், தொழில்நிறுவனங்கள் திணறி வருகின்றன.
ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச போனஸ் தொகைதான் என முடிவாகியுள்ளது. ஓரிரு நிறுவனங்கள் இன்று முதல் போனஸ் பட்டுவாடா செய்யவுள்ளன.
ஹெச்.எம்.எஸ்., தலைவர் ராஜாமணி கூறியதாவது:
ஜவுளித்துறை சுணக்கத்தில் உள்ளது. சில நிறுவனங்கள் திங்கள்கிழமை (இன்று) பட்டுவாடா செய்வதாக கூறியுள்ளன. 8.3 என்ற குறைந்தபட்ச போனஸ் தொகைதான் வழங்க முடியும் எனக் கூறியுள்ளன. தொழிலின் நிலை கருதி கூடுதல் போனஸ் கேட்க முடியாத நிலை உள்ளது.
சில நிறுவனங்கள் இன்னும் இதுதொடர்பாக எதையும் அறிவிக்காமல் மவுனம் காக்கின்றன. தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்புதான் போனஸ் வழங்கப்படக்கூடும். அமைப்புசாரா தொழிலாளர்களைப் பொறுத்தவரை அரசு அல்லது வாரியம் 7,000 ரூபாய் போனஸ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த ஆண்டாவது நடைமுறைக்கு வந்தால் மகிழ்ச்சி.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இன்ஜினியரிங் துறை
இத்துறையில் நடப்பாண்டு போனஸ் பட்டுவாடா துவங்கவில்லை. குறைந்தபட்ச போனஸ் தொகையாவது கிடைக்குமா என, தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கொசிமா தலைவர் நல்ல தம்பி கூறியதாவது:
ஜவுளித்துறை சுணக்கத்தில் இருப்பதால், அதைச் சார்ந்துள்ள பவுண்டரி, இன்ஜி., துறைகளில் போதிய ஆர்டர் இல்லை. இதனால், நடப்பாண்டு போனஸ் பேச்சு இன்னும் துவங்கவேயில்லை.
ஆட்களை விட்டுவிட்டால், ஆர்டர் கிடைக்கும்போது ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலையில்தான், பெரும்பாலான உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், வால்வு ஏற்றுமதி குறைந்து, அதுசார்ந்த துறையும் தொய்வில் உள்ளது.
போனஸ் எப்படி வழங்குவது என நிறுவனங்களும், எப்படியாவது கிடைக்காதா என்ற நிலையில், தொழிலாளர்களும் இருப்பதுதான் நிதர்சனம்.
பம்ப்செட் துறை
கோப்மா தலைவர் மணிராஜ் கூறியதாவது:
பம்ப் உற்பத்தியில் குறு, சிறு நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடுத்தர நிறுவனங்களும் பாதிப்பை உணரத் துவங்கியுள்ளன. மூலப்பொருளின் கணிக்க முடியாத விலையேற்றம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
30 சதவீத குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் பட்டுவாடா துவங்கவில்லை. தொழிலாளர்களின் சிரமம் எங்களுக்குப் புரிகிறது. அவர்களும் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்பாக போனஸ் வழங்கப்பட்டால்தான், தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தின் பண்டிகைச் செலவை ஈடுகட்ட முடியும்.
இம்முறை நிறுவனங்கள், தொழிலாளர்கள் இருதரப்புமே 'போனஸ்' பட்டுவாடாவை, தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன் தான், முடிவு செய்யும் சூழல்தான் நிலவுகிறது.