தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குளங்களை துார் வாருவது எப்போது?

 குளங்களை துார் வாருவது எப்போது?

 குளங்களை துார் வாருவது எப்போது?


ADDED : பிப் 11, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலூர்: சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், 100 ஏக்கர் பரப்பில் பெரிய குளம் மற்றும், 80 ஏக்கர் பரப்பளவில் சின்னகுளம் உள்ளன. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரால், சுற்றுவட்டார விவசாய நிலங்களும், விவசாயிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

நொய்யல் ஆற்றில் உள்ள ராவத்தூர் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்கால் வழியாக இக்குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடுவது வழக்கம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நொய்யல் ஆற்றில் ஓடும் கழிவு நீர் தான் குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால், குளங்களில் டன் கணக்கில் கழிவுகள் தேங்கி உள்ளன. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

குளங்களை தூர் வாரி, கழிவுகளை அகற்ற வேண்டும், என, விவசாய சங்கங்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை, என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த டிச. மாதம், சூலூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் 'முதல்வரின் முகவரி' பிரிவுக்கு அனுப்பிய மனுவில்,' சூலூர் வட்டாரத்தில் விவசாயத்துக்கு அடிப்படையாக இருக்கும் இரு குளங்களை தூர் வாரி, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கழிவு நீர் தேக்கப்பட்டு, வெளியேற்றப்படுவதால், விவசாய விளைபொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அந்த நீரால், புதுப்புது நோய்கள் உருவாகி, விவசாயிகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி குளங்களை தூர் வார வேண்டும், என கூறியிருந்தார்.

அதற்கு, நொய்யல் கிழக்கு பிரிவு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அளித்துள்ள பதிலில், ''சூலூரில் உள்ள பெரிய குளம், சின்ன குளத்தில் தற்போது, முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. தண்ணீர் அளவு குறைந்தவுடன், இரு குளங்களையும் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும், என, கூறப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எரிச்சலை தந்துள்ளது.

''சில வருடமாகவே இதே பதிலைதான் அதிகாரிகள் கூறுகின்றனர். கோடை காலத்தில் குளங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். அப்போது இருக்கும் கழிவு நீர் மற்றும் கழிவுகளை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன் வளர்ப்போரின் அழுத்தம் காரணமாக, அதிகாரிகள் தண்ணீரை திறந்து விடுகின்றனர். செய்வதையும் செய்து விட்டு, குளத்தில் நீர் குறையட்டும், தூர் வாருகிறோம் என்பது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. நல்லது செய்யக்கூடாது என அதிகாரிகள் கங்கணம் கட்டி கொண்டுள்ளனர்,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us