/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் மோட்டார் தர பரிசோதனை கூடத்துக்கு நிதி ஒதுக்குவது எப்போ? சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் காத்திருப்பு
/
மின் மோட்டார் தர பரிசோதனை கூடத்துக்கு நிதி ஒதுக்குவது எப்போ? சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் காத்திருப்பு
மின் மோட்டார் தர பரிசோதனை கூடத்துக்கு நிதி ஒதுக்குவது எப்போ? சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் காத்திருப்பு
மின் மோட்டார் தர பரிசோதனை கூடத்துக்கு நிதி ஒதுக்குவது எப்போ? சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் காத்திருப்பு
ADDED : ஏப் 24, 2025 06:23 AM

கோவை: கோவையில் தயாரிக்கப்படும் மின்சார வாகன மோட்டார்களை பரிசோதனை செய்வதற்கான கூடம் அமைக்க, ஒன்பது கோடி ரூபாய் மானியம் ஒதுக்குவதாக, தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்நிதியை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
மின்சார வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில், கோவை தொழில்துறை தீவிரம் காட்டி வருகிறது. தற்போது மூன்று நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கியுள்ளன; 26 நிறுவனங்கள் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மோட்டார்களை பரிசோதனை செய்ய, ஆய்வக வசதிகளை ஏற்படுத்த, 10 கோடி ரூபாயில் 'சிடார்க்' திட்டத்தை தயார் செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்பது கோடி ரூபாய் மானியம் வழங்க தமிழக தொழில்துறை ஒப்புக்கொண்டுள்ளது.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா), கோவையில் உள்ள மின் மோட்டார் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளாக மின் மோட்டார் உற்பத்தி, அதற்கான கட்டுப்பாட்டு கருவிகளை உருவாக்குவதில் பயிற்சி, நேரடி செய்முறைகளை மேற்கொண்டது. அதையடுத்து, 26 நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கியுள்ளன. மின் மோட்டார்கள், அதற்கான கன்ட்ரோல் கருவிகள் தயாரிப்பிலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இவை தரும் உதிரி பாகங்களைக் கொண்டு, மூன்று நிறுவனங்கள் மோட்டார் உற்பத்தி செய்து, பெரிய நிறுவனங்களுக்கும் சப்ளை செய்ய தொடங்கியுள்ளன.
உற்பத்தி செய்த மோட்டார்களை தரப்பரிசோதனை செய்து சான்றளிக்க ஆய்வகம் தேவையாக இருந்தது. மோட்டார் பம்புக்கு தர ஆய்வு செய்து சான்று வழங்கி வரும் 'சிடார்க்' நிறுவனத்தை பயன்படுத்த 'கொடிசியா'வும், 'சீமா'வும் முடிவு செய்தன. தமிழக அரசிடம் இதுகுறித்து பேச்சு நடத்தின. தமிழக அரசும் உதவி செய்ய ஒப்புக் கொண்டது. கோவை சிட்கோ அருகில் உள்ள 'சிடார்க்' ஆய்வகத்துக்கு சொந்தமான இடத்தில் துவங்க முடிவானது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தமிழக தொழில் துறை ஒப்புதல் அளித்து பணிகள் நடந்து வருகின்றன.
புதிய ஆய்வகத்துக்கான மதிப்பீடு, 10 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. அரசு மானியமாக ஒன்பது கோடி ரூபாய் வழங்க அறிவிப்பு வெளியானது. ஆனால், நிதி வந்து சேராத நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தியில் தொய்வு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளன. ஆய்வகம் உருவானால், பல நிறுவனங்கள் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும்.
'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
கோவையில் ஏற்கனவே பம்ப் மோட்டார் தயாரிப்பு அனுபவங்கள், மின் வாகனங்களுக்கான மோட்டார் உற்பத்தி செய்ய கை கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் தொடர்ந்து மின் வாகன மோட்டர் தயாரிப்பில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பங்களை அறியவும், உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மின் மோட்டார்களை விட, பேட்டரிகளின் தொழில்நுட்பம் உலக அளவில் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யவும், ஆய்வு செய்யவும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் நிதி வசதி தேவையாக உள்ளது.
மின்வாகனங்களுக்கு தேவையான மோட்டார் உற்பத்தியில் கோவை சிறப்பான இடத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். அரசும் உதவி வருகிறது. மின் வாகன மோட்டார்களுக்கான முக்கிய நகரமாக கோவை மாறும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.