/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோரத்துக்கு தீர்வு எப்போது? நெடுஞ்சாலைத்துறை மீண்டும் 'கெடு'
/
ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோரத்துக்கு தீர்வு எப்போது? நெடுஞ்சாலைத்துறை மீண்டும் 'கெடு'
ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோரத்துக்கு தீர்வு எப்போது? நெடுஞ்சாலைத்துறை மீண்டும் 'கெடு'
ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோரத்துக்கு தீர்வு எப்போது? நெடுஞ்சாலைத்துறை மீண்டும் 'கெடு'
ADDED : ஆக 06, 2025 10:00 PM
பெ.நா.பாளையம்; கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மீண்டும், மீண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கடைசி தேதி என, நோட்டீஸ் அளிப்பது பொதுமக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. காலை, இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.
இதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ஜி.என்., மில்ஸ் பிரிவு ஆகிய மூன்று இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசாரோ, அந்தந்த பகுதி பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகமோ, தேசிய நெடுஞ்சாலை துறையினரோ நடவடிக்கை எடுக்க முன் வருவதில்லை.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து, வியாபாரம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கவுண்டம்பாளையம் முதல் மத்தம்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
கடைகளை அகற்ற வேண்டும் என, கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர், கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் மூன்றாவது வாரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட இன்ஜினியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் சாலையின் இரண்டு புறமும், ஓரங்களில், தங்களால் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, கூரை, சாலை திட்டுக்கள், விளம்பர பலகைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அதை ஆக்கிரமிப்பாளர்கள் மார்ச், 24ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என, அறிவிப்பு வெளியிட்டது. தவறும் பட்சத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால், அப்போது ஏற்படும் பொருள் சேதத்துக்கு துறை பொறுப்பு ஏற்காது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்படும் செலவுக்கு ஆக்கிரமிப்பாளர்களே பொறுப்பு' எனவும், அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அது அறிவிப்போடு சரி, அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜூலை, 14ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மீண்டும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிட்டது. இதுவும் அறிவிப்போடு சரி ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.
அப்போதுதான் விபத்துக்கள் நடப்பதை குறைக்க முடியும்' என்றனர்.