/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை தடுப்புகளிலும் ஒளிரும் விளம்பரங்கள் யாருக்காக? ஐகோர்ட் உத்தரவை மீறி அரசு சட்ட திருத்தம்
/
சாலை தடுப்புகளிலும் ஒளிரும் விளம்பரங்கள் யாருக்காக? ஐகோர்ட் உத்தரவை மீறி அரசு சட்ட திருத்தம்
சாலை தடுப்புகளிலும் ஒளிரும் விளம்பரங்கள் யாருக்காக? ஐகோர்ட் உத்தரவை மீறி அரசு சட்ட திருத்தம்
சாலை தடுப்புகளிலும் ஒளிரும் விளம்பரங்கள் யாருக்காக? ஐகோர்ட் உத்தரவை மீறி அரசு சட்ட திருத்தம்
ADDED : அக் 24, 2025 06:15 AM

கோவை: சாலை ஓரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதே தவறு என கோர்ட் கண்டிக்கும் நிலையில், சாலைகளில் உள்ள சென்டர் மீடியன் எனப்படும் மைய தடுப்புகளிலும் ஒளிரும் விளம்பர போர்டுகள் பொருத்த அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை தமிழக அரசு செய்திருப்பது, கோர்ட் அவமதிப்பாகும் என கோவை கன்ஸ்யூமர் காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு சில பெரும் புள்ளிகள் பணம் சம்பாதிக்க, தமிழக அரசு புதுப்புது வழிகளை கண்டுபிடித்து கொடுப்பதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கக் கூடாது என்பதற்காகவே சாலை சந்திப்புகள், சாலைகளின் அருகாமையில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாதென நீதிமன்றங்கள் அறிவுறுத்தின. தமிழக அரசும் பல்வேறு அரசாணைகள் மூலம் சுட்டிக் காட்டியுள்ளது. இருப்பினும் ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இச்சூழலில், சாலையின் மையத்தடுப்பில், 1 மீ. x 0.6 மீ. அளவுக்கு, ஒளிரும் விளக்குடன் கூடிய விளம்பர பலகைகள் அமைக்க, தமிழக நகர்ப்புற உள்ளாட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது, நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசாணையை மீறிய செயல்.
திருத்தத்தை திரும்பப் பெற்று, மையத்தடுப்புகளில் உள்ள விளம்பர பலகைகளை எடுக்காவிட்டால், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், என, கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன், தமிழக நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
சாலையின் மையத்தடுப்புகளில் விளம்பர பலகைகளை அனுமதிக்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள்-2023ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்.
சாலை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல், நகர்ப்புற நிர்வாகத் துறை விளம்பர விதிகளை அறிவித்துள்ளது.
இதற்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், 'மையத்தடுப்புகளில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்க மாட்டோம்' என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இப்போது அதற்கு மாறாக திருத்தங்கள் செய்திருப்பது, சாலை பாதுகாப்புக்கும், 'இண்டியன் ரோடு காங்கிரஸ்' விதிமுறைகளுக்கும் முரணானது. ஐகோர்ட்டில் அரசு தரப்பில் அளித்த உறுதிமொழி மீறப்பட்டிருக்கிறது.
விளம்பரங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவே அமைக்கப்படுகின்றன. சாலையிலோ, மையத்தடுப்பிலோ அமைக்கப்பட்டால், வாகன ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிக்கும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இதில், சாலை பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற நிர்வாகத்துறை இத்தகைய விதிகளை உருவாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இது, நீதிமன்ற அவமதிப்பாகும். விதிகளில் செய்துள்ள திருத்தத்தை திரும்பப் பெறுவதோடு, மையத்தடுப்புகளில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

