கூலி உயர்வு வழங்காதவர்கள் பட்டியல் இன்னார் தான்!அதிகாரியிடம் வழங்கி எதிர்பார்ப்பு
கூலி உயர்வு வழங்காதவர்கள் பட்டியல் இன்னார் தான்!அதிகாரியிடம் வழங்கி எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 26, 2026 04:37 PM
ADDED : ஜூலை 26, 2026 04:22 PM

சோமனுார்: ஒப்பந்தபடி கூலி உயர்வு வழங்காத, ஜவுளி உற்பத்தியாளர்கள் குறித்த பட்டியலை, தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனரிடம், விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பினர் அளித்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. 90 சதவீத விசைத்தறிகள், ஒப்பந்த கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. கடந்தாண்டு புதிய கூலி ஒப்பந்தம் போடப்பட்டும், சில பகுதிகளில் ஒப்பந்தப்படி கூலி வழங்குவதில்லை என, விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் களமிறங்கினர். புதிய ஒப்பந்தப்படி, கூலி வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் பூபதி மற்றும் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
பல கட்ட போராட்டங்களுக்கு பின், கடந்தாண்டு, கோவை கலெக்டர் முன்னிலையில், கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமல்படுத்த வேண்டிய கூலி உயர்வை, திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, பல்லடம் உட்பட பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்குவதில்லை என, புகார் எழுந்தன. கூலி உயர்வு கிடைக்காததால், அப்பகுதி விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.
ஒப்பந்தப்படி கூலியை வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் குறித்து விபரங்களை சேகரித்து, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினோம். இதை தொடர்ந்து, கோவை தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மண்டல உதவி கமிஷனர் பால தண்டாயுதத்திடம், கூலி உயர்வை வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் பட்டியலை வழங்கி, கூலி உயர்வை பெற்று தரவும், கூலி ஒப்பந்தத்தை சட்டப் பாதுகாப்புடன் நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம். கூலியை குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார். அடுத்த கூட்டம், ஆக., 6ம் தேதி நடக்கும் எனவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
