/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை எப்போது வெல்வது யாரிடம் சொல்வது?: குமுறும் கோவை தொழில்துறையினர்!
/
கோரிக்கைகளை எப்போது வெல்வது யாரிடம் சொல்வது?: குமுறும் கோவை தொழில்துறையினர்!
கோரிக்கைகளை எப்போது வெல்வது யாரிடம் சொல்வது?: குமுறும் கோவை தொழில்துறையினர்!
கோரிக்கைகளை எப்போது வெல்வது யாரிடம் சொல்வது?: குமுறும் கோவை தொழில்துறையினர்!
ADDED : பிப் 22, 2024 06:05 AM

தமிழக அரசால் தீர்வு காணப்பட வேண்டிய தொழில் துறை கோரிக்கைகளை, யார் மூலமாகக் கொண்டு செல்வது என்பதே தெரியாமல், கோவை தொழில் அமைப்பினர் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரத்துக்கு அடுத்து மிகப்பெரிய தொழில் வளம் மிக்க மாவட்டமாக கோவை உள்ளது. ஒரு காலத்தில், ஜவுளித்துறையால் மட்டும் அடையாளம் பெற்றிருந்த கோவை, கடந்த சில ஆண்டுகளில், வார்ப்படம், இன்ஜினியரிங், பம்ப், கிரைண்டர், ஐ.டி., ஆட்டோமொபைல்ஸ், உயர்கல்வி, உயர்ரக மருத்துவம் என பன்முகத்தன்மையுள்ள நகரமாக வளர்ந்து வருகிறது.
இங்குள்ள தட்பவெப்பநிலை, அமைதியான சூழ்நிலை காரணமாக, ஓய்வு காலத்தில் இங்கு வந்து குடியேற விரும்புவோரின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுமானத் தொழிலும் அபரிமிதமாக நடந்து வருகிறது.
அரசுகளின் ஒத்துழைப்பு முக்கியம்
இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு, மத்திய, மாநில அரசுகளின் கூட்டு ஒத்துழைப்பு, மிகமிக அவசியமாகவுள்ளது.
விமான நிலைய விரிவாக்கம், கோவை மெட்ரோ ரயில் திட்டம், புறவழிச்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகின்றன.
இவை இருந்தால் மட்டுமே, பன்னாட்டு நிறுவனங்கள் கோவையில் கால் பதிப்பதற்கு முன் வருமென்பதால், இந்த கோரிக்கைகளை இரு அரசுகளிடமும் பல்வேறு தொழில் மற்றும் சமூக அமைப்புகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மின் கட்டண குறைப்பு
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரின், இப்போதைய முக்கியக் கோரிக்கை, மின் கட்டண குறைப்பாகும். அதை தமிழக அரசு ஏற்கவில்லை. தொழில் துவங்குவதற்கு ஒற்றைச் சாளர முறை அனுமதி, புதிய தொழில்பேட்டை, வட்டிச் சலுகை என பல எதிர்பார்ப்புகள் பலமாகவுள்ளன.
இதேபோல, மத்திய அரசிடமிருந்தும் தொழில் முனைவோர், நிறைய விஷயங்களை எதிர்பார்க்கின்றனர்.
இதில் தொழில் துறையினரின் கோரிக்கைகளைச் சேகரித்து, மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காணும் முயற்சிகளை, கோவையிலுள்ள பா.ஜ., மக்கள் பிரதி நிதிகள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
ஆனால் கோவையில் தி.மு.க., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் யாருமில்லை. பொள்ளாச்சி, நீலகிரி எம்.பி.,க் களுக்கும், கோவைக்கான பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
'பொறுப்புகள்' மாறியும் பயனில்லை
ஆட்சிக்கு வந்தபின்பு, இந்த மாவட்டத்துக்கு பொறுப்பாக நான்கு அமைச்சர்கள் மாற்றப்பட்டு விட்டனர். அவர்கள் அனைவரிடமும், கோவை தொழில் அமைப்பினர் தங்கள் கோரிக்கைகளைக் குவித்து விட்டனர்.
பொறுப்பு அமைச்சர்கள் மாறினார்களே தவிர, பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படவே இல்லை. இப்போது அரசுத்துறை அதிகாரிகள் கெடுபிடி, லஞ்சம், அனுமதி பெறுவதில் அசாத்திய தாமதம், தேவையற்ற நடைமுறைகள் என எக்கச்சக்கமான புதுப்புது பிரச்னைகளை, தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.
இவற்றை யார் மூலமாக தமிழக அரசிடம் கொண்டு சென்று, அதற்குத் தீர்வு காண்பதென்று தெரியாமல், தொழில் அமைப்பினர் குமுறுகின்றனர்.
கோவைக்கும், தமிழக அரசுக்குமான இணைப்புப் பாலமாக ஒருவரை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். இல்லாவிடில், வரும் லோக்சபா தேர்தலில் அதற்கான பலனை, ஆளும்கட்சி அறுவடை செய்தே தீர வேண்டும்.