/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? விஞ்ஞானியுடன் விவசாயிகள் வாக்குவாதம்
/
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? விஞ்ஞானியுடன் விவசாயிகள் வாக்குவாதம்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? விஞ்ஞானியுடன் விவசாயிகள் வாக்குவாதம்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? விஞ்ஞானியுடன் விவசாயிகள் வாக்குவாதம்
ADDED : டிச 19, 2025 05:09 AM

தொண்டாமுத்தூர்: வனத்துறை சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நல்லூர் வயலில் நேற்று நடந்தது. போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, ஆசிய ஆணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையத்தின் விஞ்ஞானி நவீன், ஆனைமலை புலிகள் காப்பக உயிரியலாளர் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருபது ஆண்டுகளாக இல்லாமல், தற்போது கோவை வனக்கோட்டத்தில் யானைகள் அதிகளவு வனப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் குறித்து, விஞ்ஞானி நவீன் விரிவாக எடுத்துரைத்தார். யானைகள் வெளியேறுவதற்கு, வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நவீனமயமாக்கலே முக்கிய காரணமாக உள்ளது என தெரிவித்தார். இதற்கு விவசாயிகள், ஆட்சேபனை தெரிவித்தனர். ”வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலங்களில் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகிறோம்.
அப்போதெல்லாம், யானைகள் வெளியே வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், போளுவாம்பட்டி வனச்சரகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளை பார்ப்பதே அரிதாக இருந்தது. யானை களுக்கு காட்டில் உணவு இல்லாத காரணத்தால் இப்போது உணவு தேடி ஊருக்குள் வருகிறது” என்றனர்.
”காட்டு யானைகளை காட்டிலும், தற்போது காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, அதனை விவசாயிகளே கொல்ல வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி களுக்கு, வனத்துறையினரிடம் அனுமதி வாங்கி, குறிப்பிட்ட முறையிலேயே மின்வேலி அமைக்க வேண்டும் என, வனத்துறை, விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க அமைக்கப்படுவதால், தோட்டங்களுக்கு மின்வேலி அமைக்கும் செலவை வனத்துறையை ஏற்க வேண்டும்” என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
பதிலளித்த வனத்துறையினர், காட்டுப் பன்றிகள் அதிகம் நடமாட்டம் உள்ள தோட்டங்கள் குறித்து விவசாயிகள் தகவல் அளித்தால், சட்டத்திற்குட்பட்டு நாங்கள் அதனை சுட்டுக் கொல்லுவோம்.
மின்வேலிகளை பழைய முறையில் விவசாயிகள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு வனத்துறையிடம் அனுமதி மட்டும் பெற வேண்டும். காட்டு யானைகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,என்றனர்.

