/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய ஏன் இந்த தாமதம்? காட்சிப்பொருளாக நிற்பதால் அதிருப்தி
/
அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய ஏன் இந்த தாமதம்? காட்சிப்பொருளாக நிற்பதால் அதிருப்தி
அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய ஏன் இந்த தாமதம்? காட்சிப்பொருளாக நிற்பதால் அதிருப்தி
அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய ஏன் இந்த தாமதம்? காட்சிப்பொருளாக நிற்பதால் அதிருப்தி
ADDED : ஆக 06, 2025 10:11 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையத்தில் குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்பட்ட, 512 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை, எளிய, ஆதிதிராவிட இன மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
மொத்தம், 45.98 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 512 வீடுகள் கட்டும் பணிகள் கடந்த ஆட்சியிலேயே துவங்கப்பட்டது.ஒவ்வொரு வீடும், வரவேற்பறை, படுக்கையறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டன.
குடியிருப்பில் வீடு வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு ஏதுவாக, கிட்ட சூராம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகர் திட்டப்பகுதியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வாயிலாக, முகாம் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தேர்வு செய்யப்பட்டவர்கள் பணம் செலுத்தியுள்ளனர். எனினும், இதுவரை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி துவங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்தது. தற்போது பணி நிறைவந்தாலும், வீடு கேட்டு விண்ணப்பித்து பணம் செலுத்தியவர்களுக்கு இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை.
காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்து உடனடியாக வீடுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தவறு நடக்க கூடாது எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ''நகராட்சியில் மரப்பேட்டை, பொட்டுமேடு, சுண்ணாம்பு கால்வாய், கண்ணப்பன் நகர் பகுதி மக்கள், சாக்கடை கால்வாய் அருகே வசிக்கின்றனர். இவர்களது நிலை கண்டு மாற்று இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என அப்போதைய முதல்வர் பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்தேன்.
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில பணிகள் மட்டுமே நிலுவை இருந்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக, கடந்த, நான்கரை ஆண்டுகளாக திட்ட பணிகளை இழுத்தடித்து வருகின்றனர்.ஒரு சில ஆளுங்கட்சியினர், லாபம் பார்க்க சிலருக்கு வீடு ஒதுக்கீடு செய்து தர நெருக்கடி தந்துள்ளதாக தெரிகிறது.
அவ்வாறு செய்யாமல் உண்மையான பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சட்டசபையில் வலியுறுத்தி பேசியுள்ளேன். அரசுவிரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.