UPDATED : அக் 13, 2026 12:53 AM
ADDED : அக் 13, 2026 12:50 AM

கூடலுார்:
கூடலுார் அருகே, சுவரில் தலையை மோதி மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தொரப்பள்ளி அருகே கோடமுலா பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குட்டன்,40. இவர் மனைவி கீதா, 36. இவர் நேற்று காலை வீட்டில் இறந்த கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, குட்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.
கூடலுார் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் கூறுகையில், ‘‘நேற்று (நேற்று முன்தினம்) இரவு கீதா, குட்டன், நண்பர் கண்ணன் ஆகியோர் மது அருந்தி உள்ளனர். பிறகு, அதே வீட்டில் துாங்கியுள்ளனர்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குட்டன், நள்ளிரவு கண் விழித்து பார்த்த போது, அவரின் மனைவியும், நண்பரும் வீட்டினுள் நெருக்கமாக இருந்துள்ளனர். நண்பர் அங்கிருந்து ஓடிவிட்டார். கணவன் - மனைவிக்கு இடையே தகராறு தொடர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த குட்டன், மனைவியின் தலையை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார். அதில், படுகாயம் அடைந்த அவர், உயிரிழந்துள்ளார்,’’ என்றார்.
எஸ்.ஐ., கவியரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
