ADDED : செப் 09, 2026 07:11 PM
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் தகர கொட்டகையை காட்டுயானை சேதப்படுத்தியது.
கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகர் பேஸ்-3 ஆகிய இடங்களில் காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு சுற்றி வந்தது. அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களை ருசித்த அந்த யானை, அங்கிருந்த நாய்களை விரட்டியது.
தொடர்ந்து, நள்ளிரவு 2.00 மணி அளவில் அங்குள்ள வட மாநில கட்டட தொழிலாளர்கள் தங்கி இருந்த தகர கொட்டகைக்குள் புகுந்தது. கொட்டகையில் இருந்த உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது. அங்கிருந்து அரிசி, பருப்பு ஆகியவற்றை கீழே தள்ளி, நாசம் செய்தது. யானையைப் பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு கொட்டகையில் இருந்து வெளியேறினர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் உள்ள மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றி வேலவா நகர், ரேணுகாபுரம், லட்சுமி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
