/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 14 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் இணையுமா? ஆட்சேபனைகளை ஆய்வு செய்கிறார் துறை செயலர்
/
கோவையில் 14 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் இணையுமா? ஆட்சேபனைகளை ஆய்வு செய்கிறார் துறை செயலர்
கோவையில் 14 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் இணையுமா? ஆட்சேபனைகளை ஆய்வு செய்கிறார் துறை செயலர்
கோவையில் 14 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் இணையுமா? ஆட்சேபனைகளை ஆய்வு செய்கிறார் துறை செயலர்
ADDED : பிப் 18, 2025 11:33 PM

கோவை; ''கோவை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த ஆட்சேபனைகளை துறை செயலர் ஆய்வு செய்து, இறுதி முடிவெடுப்பார்,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள, 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சேபனை இருந்தால், ஆறு வாரங்களுக்குள் தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.
2011ல் மாநகராட்சியோடு இணைத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்னும் முழுமையாக உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை.
அதேநேரம், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் உயர்ந்து விட்டன. மக்களுக்கான வசதிகள் கிடைக்காததால், அதிருப்தி காணப்படுகிறது.
இச்சூழலில், மீண்டும், 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
பல்வேறு காரணங்களுக்காக பலரும் தங்களது ஆட்சேபனையை பதிவு செய்திருக்கின்றனர். இதை ஆய்வு செய்து, தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்படும். அரசாணை வெளியிட்ட பிறகு, அந்தந்த பகுதியில் உள்ள சொத்துக்கள், மாநகராட்சி வசம் கொண்டு வரப்படும்.
மாநகராட்சி சார்பில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். பட்டணம் ஊராட்சியில் இருந்து, மாநகராட்சியோடு இணைத்துக் கொள்ளச் சொல்லி, மனு கொடுத்திருக்கின்றனர்.
ஆட்சேபனை தொடர்பாக, அமைச்சர், கலெக்டர், கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் துறை செயலர் ஆய்வு செய்து இறுதி செய்வார்.
இவ்வாறு, அவர் கூறினார்.