/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரத்துக்கான காயகல்ப விருதுக்கு தகுதி பெறுமா? அரசு மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு
/
சுகாதாரத்துக்கான காயகல்ப விருதுக்கு தகுதி பெறுமா? அரசு மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு
சுகாதாரத்துக்கான காயகல்ப விருதுக்கு தகுதி பெறுமா? அரசு மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு
சுகாதாரத்துக்கான காயகல்ப விருதுக்கு தகுதி பெறுமா? அரசு மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு
ADDED : ஜூலை 30, 2025 08:17 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், காய கல்ப விருதுக்கான குழுவினர், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனை, 1934ம் ஆண்டு சாதாரண கட்டடத்தில் துவங்கப்பட்டது. கடந்த, 1975ம் ஆண்டு மருத்துவ மனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது, மருத்துவமனை நான்கு ஏக்கர் மற்றும் 19.50 சென்ட் பரப்பளவில், செயல்பட்டு வருகிறது. கடந்த, 2009ம் ஆண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தற்போது, 462 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. தினமும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் உள்ள நான்கு அறுவை சிகிச்சை அரங்குகளில், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருமுறை தேசிய தரச்சான்று விருது பெற்ற மருத்துவமனை, இம்முறை காயகல்ப விருதுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில், மாநில அளவிலான காயகல்ப விருதுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பழநியில் உள்ள திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் சதீஷ் தலைமையிலான செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து குழுவினருக்கு டாக்டர்கள், செவிலியர்கள் விளக்கம் அளித்தனர்.
மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்து, சுகாதாரம், சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா, அவை எவ்வாறு கையாளகப்படுகிறது, எலி தொல்லை போன்ற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:
மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ், சுகாதாரமாக இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் காயகல்ப விருதுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதில், சிறப்பாக மாநில அளவில் உள்ள மருத்துவமனைக்கு மாநில அளவில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தனியாகவும், தாலுகா மருத்துவமனைக்கு தனியாகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தனியாக விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது பொள்ளாச்சி அரசு மருத்துவனைக்கு இரண்டு முறை கிடைத்துள்ளது.
தற்போது நடப்பாண்டுக்கான காயகல்ப விருதுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மருத்துவமனையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் குடிநீர், கழிப்பிட வசதிகள், வார்டின் சுத்தம், நோய் தடுப்பு முயற்சிகள், பொதுக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது என ஆய்வு செய்தனர்.
மின்சார சிக்கனத்துக்காக சோலார் உள்ளிட்ட என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது, சமையலறை, துணி துவைக்கும் அறைகளை பார்வையிட்டனர்.இக்குழு ஆய்வு செய்து மாநில குழுவுக்கு தகவல் தெரிவிக்கும். மாநில அளவிலான குழு அறிக்கையின் படி ஆய்வு செய்து முதல், இரண்டாவது பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து, இந்த முறையும் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.