/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபராதம் கட்டினால் விதிமீறல் சரியாகிடுமா? கோவை கமிஷனர் உத்தரவால் புதிய சர்ச்சை
/
அபராதம் கட்டினால் விதிமீறல் சரியாகிடுமா? கோவை கமிஷனர் உத்தரவால் புதிய சர்ச்சை
அபராதம் கட்டினால் விதிமீறல் சரியாகிடுமா? கோவை கமிஷனர் உத்தரவால் புதிய சர்ச்சை
அபராதம் கட்டினால் விதிமீறல் சரியாகிடுமா? கோவை கமிஷனர் உத்தரவால் புதிய சர்ச்சை
ADDED : ஜூன் 29, 2025 02:11 AM

கோவை:கோவை மாநகராட்சி பகுதியில், விதிமீறல் கட்டடங்களுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டு, ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அபராதம் வசூலிப்பதால், விதிமீறல் இன்னும் அதிகரிக்கும் என, சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில், ஓராண்டுக்கு முன், கட்டட வரைபட அனுமதி பெற, சதுரடிக்கு, 44 ரூபாய் வசூலிக்கப்பட்டது; கடந்தாண்டு, 88 ரூபாயாக உயர்த்தப்பட்டது; அதேநேரம், அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டிருந்த, விதிமீறல் கட்டடங்களுக்கு சதுரடிக்கு, 20 முதல், 25 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இனி, அரசாணைப்படி, குடியிருப்புகளுக்கு சதுரடிக்கு, 88 ரூபாய், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு, 110 ரூபாய் வீதம் வசூலிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி கமிஷனரிடம் கேட்டபோது, 'வரைபட அனுமதி பெற, சதுரடிக்கு கட்டணமாக, 88 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அனுமதிக்கு மாறாக கூடுதலாக கட்டிய பரப்புக்கும் அதே தொகை செலுத்த சொல்கிறோம்.
'இதற்கு முன், 20 முதல், 25 ரூபாய் என அபராத தொகை இருந்திருக்கிறது. புதிய விதிமுறைப்படி, அத்தொகையை மாற்றாமல் விட்டுவிட்டனர். தணிக்கைத் துறை ஆய்வில் கண்டறிந்ததும், 88 ரூபாய் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தை உயர்த்தவில்லை' என்றார்.
மாநகராட்சி வரி வசூல் அலுவலர்கள் கூறுகையில், 'விதிமுறையை மீறி கூடுதலாக கட்டியுள்ள பரப்புக்கு மட்டும் அபராதமாக இந்த தொகையை வசூலிக்க, தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வரைபட அனுமதிக்கான கட்டணம். ஒரே ஒருமுறை தான் செலுத்த வேண்டும்' என்றனர்.
பதிவு பெற்ற கட்டட வரைவாளர்கள் கூறுகையில், 'மாநகராட்சி கமிஷனரின் சுற்றறிக்கை முற்றிலும் தவறானது; விதிமீறல் கட்டுமானங்களை அனுமதிக்கும் செயல்.
தொகையை செலுத்தி விட்டால் விதிமீறல் சரியாகி விடுமா? விதிமீறி கட்டடம் கட்டியிருந்தால், அதை இடிக்க உத்தரவிட வேண்டும் அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் இடமிருக்கிறது; அதற்கு கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
'அவ்வாறு செய்யாமல், வரி விதிப்பின்போது, அதற்கான தொகையை மட்டும் பெற்றால், விதிமீறல் கட்டடங்களை அங்கீகரித்தது போலாகி விடும். இனி, விதிமீறல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது' என்றனர்.