/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்பருவக் கல்வி வயதில் அரசு கவனம் செலுத்துமா?
/
முன்பருவக் கல்வி வயதில் அரசு கவனம் செலுத்துமா?
ADDED : ஆக 13, 2025 01:16 AM

கோவை; மாநில கல்விக் கொள்கையில், முன்பருவக் கல்வி தொடர்பான விவரங்கள் இடம்பெறாதது குறித்து, கேள்வி எழுந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020ல், ஒன்றாம் வகுப்பு சேர்க்கை வயது 6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குழந்தை 3 வயதில் முன்பருவக் கல்வியில் (பிரி-கேஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி) சேர்ந்தால், 6 வயதில் 1ம் வகுப்பிற்கு செல்லும் வகையில் கல்வி கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் வளர்ச்சித் திறனை கருத்தில் கொண்டு, போதுமான முன்பருவக் கல்வி அளித்து அறிவாற்றல், மொழித் திறன் மற்றும் சமூகத் திறனை மேம்படுத்தும் வகையில், இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் தற்போதைய நடைமுறையில், குழந்தைகள் 2 வயதில் பிரீ-கேஜி, 3 வயதில் எல்.கே.ஜி, 4 வயதில் யூ.கே.ஜி, 5 வயதில் 1ம் வகுப்பு என வகுக்கப்பட்டுள்ளது.
இதனால், வளர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே குழந்தைகள் பாட சுமைகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்.
விளையாட்டு வழி கல்வி (ப்ளேவே முறை) என அரசு கூறினாலும் கூட, வளர்ச்சி அடைவதற்கு முன்பே பாட சுமை திணிக்கப்படுவதால், கற்றல் திறன் பாதிக்கப்படலாம் என, கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ப்ளே ஸ்கூல் உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், 'மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் கமிட்டியினரை 2022ல் நேரில் சந்தித்து, முன்பருவக் கல்வி தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தோம். வெளியான மாநிலக் கல்விக் கொள்கையில் அதுகுறித்து குறிப்பிடவே இல்லை.
தற்போதைய கல்விக் கொள்கையில் முன்பருவக் கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என மூன்று பிரிவுகள் இருப்பதாகவும், தற்போது பள்ளிக் கல்வி குறித்த கொள்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை விரைவில் வெளியாகும் எனவும், பள்ளிக் கல்வி செயலாளர் அறிவித்துள்ளார்.
முன்பருவக் கல்விக்கான வயது தொடர்பாக, குழந்தைகளின் நலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.