/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரைவழியில் மறைந்து போன 'கொடிக்கால்'கள் கணியூர் வெற்றிலை மீட்கப்படுமா?
/
கரைவழியில் மறைந்து போன 'கொடிக்கால்'கள் கணியூர் வெற்றிலை மீட்கப்படுமா?
கரைவழியில் மறைந்து போன 'கொடிக்கால்'கள் கணியூர் வெற்றிலை மீட்கப்படுமா?
கரைவழியில் மறைந்து போன 'கொடிக்கால்'கள் கணியூர் வெற்றிலை மீட்கப்படுமா?
ADDED : மே 19, 2025 11:23 PM
மடத்துக்குளம்; கணியூர் பகுதியின் அடையாளமாக இருந்த வெற்றிலை சாகுபடி சுவடு இல்லாமல், மறைந்து வருகிறது; விளைநிலங்களில் மீண்டும் 'கொடிக்கால்' வர தோட்டக்கலைத்துறை வாயிலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் தாலுகா அமராவதி ஆற்றங்கரை கிராமங்களில், வெற்றிலை சாகுபடி பிரதானமாக இருந்தது.
குறிப்பாக, கணியூர், கடத்துார் பகுதியில், ஆற்றங்கரையிலுள்ள விளைநிலங்கள் அனைத்திலும், ஆண்டு முழுவதும் வெற்றிலை சாகுபடிக்காக 'கொடிக்கால்' அமைக்கப்பட்டிருக்கும்.
வெற்றிலை கொடி நடவு செய்யும் முன், அகத்தி விதையை நடவு செய்வார்கள். அகத்தி வளர்ந்ததும், குச்சிகளை சுற்றி, வெற்றிலை கொடி நடவு செய்து, அதன் மேல், கொடியை படர விடுவார்கள். இதுவே 'கொடிக்கால்' எனப்படும்.
கணியூரில் உற்பத்தியாகும் வெற்றிலை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இச்சாகுபடி சார்ந்த வர்த்தகம் வாயிலாக அப்பகுதியில், நேரடியாகவும், மறைமுகமாகவும், நுாற்றுக்கணக்கனோர் பயன்பெற்று வந்தனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வெற்றிலை சாகுபடி, தற்போது கணியூர் பகுதியில் தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது. ஆற்றங்கரையிலும், நீர் வளம் மிக்க விளைநிலங்களிலும் பெரும்பாலானவர்கள், தென்னை சாகுபடிக்கு மாறி விட்டனர்.
வெற்றிலை சாகுபடியை கைவிட மகசூல் பாதிப்பு, மண் வளம் குறைந்து, பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டது; போதிய விலை கிடைக்காதது என பல வகையான காரணங்களை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இச்சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பங்கள், ரகங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, தமிழக அரசு, தோட்டக்கலைத்துறை வாயிலாக கணியூர் பகுதியில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, வெற்றிலை சாகுபடியை மீட்டெடுக்க வேண்டும். இதனால், கிராமப்புற தொழிலாளர்கள் அதிகளவு பயன்பெறுவார்கள்.
அது சார்ந்த வர்த்தகமும் அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் மாற்றுச்சாகுபடிக்கு சென்றதற்கான காரணங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.