/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு - அவிநாசி இரண்டாவது திட்டம் வருமா? வராதா? நம்பிக்கை இழந்து வரும் விவசாயிகள்
/
அத்திக்கடவு - அவிநாசி இரண்டாவது திட்டம் வருமா? வராதா? நம்பிக்கை இழந்து வரும் விவசாயிகள்
அத்திக்கடவு - அவிநாசி இரண்டாவது திட்டம் வருமா? வராதா? நம்பிக்கை இழந்து வரும் விவசாயிகள்
அத்திக்கடவு - அவிநாசி இரண்டாவது திட்டம் வருமா? வராதா? நம்பிக்கை இழந்து வரும் விவசாயிகள்
ADDED : ஜன 02, 2025 05:46 AM

மேட்டுப்பாளையம் :அத்திக்கடவு - அவிநாசி இரண்டாவது திட்ட அறிக்கை முழுமையாக தயார் செய்து, அனுப்பியும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து, தண்ணீரை பம்பிங் செய்யும் அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று திட்டம் என, அரசு அறிவித்தது. இத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், பவானிசாகர், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள, குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன. விடுபட்ட பகுதிகளுக்கு, அத்திக்கடவு - அவிநாசி இரண்டாவது திட்டம் என பெயரிட்டு, அரசு அறிவித்தது.
எதிர்பார்ப்பு
தி.மு.க., அரசு பதவி ஏற்றவுடன், அத்திக்கடவு - அவிநாசி இரண்டாவது திட்டத்தை, நடைமுறைப்படுத்தும் என விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் முதல் திட்டத்தை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வராமல் உள்ளது. அந்த வகையில் இரண்டாவது திட்டத்தை, தி.மு.க., அரசின் ஆட்சி காலம் முடிவதற்குள், தமிழக அரசு கொண்டுவரும் என்று, விவசாயிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் அரங்கசாமி கூறியதாவது:
கடந்த 2020ல் அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இத்திட்டம் குறித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
புதிய அமைப்பு
தமிழக தலைமைச் செயலருக்கு சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் காரமடை ஒன்றியத்தில், 250 குளங்கள், குட்டைகள், பவானிசாகர் ஒன்றியத்தில், 230 குளம், குட்டைகள் அன்னூர் ஒன்றியத்தில், 90, சர்க்கார் சாமகுளத்தில், 30, பெரியநாயக்கன்பாளையத்தில், 20 ஆகிய விடுபட்ட குளம், இரண்டாவது திட்டத்தில்,மொத்தம், 620 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்ய அரசு அறிவிக்க வேண்டும். அதற்கு நிதி ஒதுக்க வேண்டும். இத்திட்டப் பணிகளை அரசு எப்போதும் துவங்கும் என, விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
எனவே இரண்டாவது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, குளம் குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கும் பொழுது, கிணறுகளில் நீரூற்று கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், ஐந்து ஒன்றியங்களில், 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி கிடைக்கும். ஆனால், 2020ல் ஆய்வு செய்த முதல் நிலை அறிக்கையோடு நின்றுள்ளது.
இத்திட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநிலை அமைப்பினர் ஒன்றிணைந்து, அத்திக்கடவு அவிநாசி திட்ட உரிமை குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை மனுகள் அனுப்பப்பட்டு உள்ளன. ஆனால் இதுவரை ஒரு பதிலும் இல்லை; விவசாயிகள் நம்பிக்கை இழந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.