/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொட்டில் கட்டி துாக்கி செல்லும் நிலை மாறுமா? ரோடு வசதி ஏற்படுத்த கிராமசபையில் கோரிக்கை
/
தொட்டில் கட்டி துாக்கி செல்லும் நிலை மாறுமா? ரோடு வசதி ஏற்படுத்த கிராமசபையில் கோரிக்கை
தொட்டில் கட்டி துாக்கி செல்லும் நிலை மாறுமா? ரோடு வசதி ஏற்படுத்த கிராமசபையில் கோரிக்கை
தொட்டில் கட்டி துாக்கி செல்லும் நிலை மாறுமா? ரோடு வசதி ஏற்படுத்த கிராமசபையில் கோரிக்கை
ADDED : டிச 13, 2025 07:41 AM

வால்பாறை: கல்லார்குடி செட்டில்மென்ட் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பழங்குடியின மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது கல்லார்குடி செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த வன உரிமைத்தலைவர் ராஜேஸ்வரி, செட்டில்மென்ட் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வகையில், நகராட்சி சார்பில் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், கல்லார்குடி தெப்பக்குளம் மேட்டுப்பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தார். கமிஷனர் குமரன், தாசில்தார் அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லார்குடி, சின்கோனா, உடுமன்பாறை, சங்கரன்குடி, பரமன்கடவு ஆகிய செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.
பழங்குடியின மக்கள் கூறியதாவது: செட்டில்மென்ட்களில் ரோடு, நடைபாதை வசதி இல்லை. இதனால், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி துாக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, செட்டில்மென்ட் பகுதியில் வாகனங்கள் சென்று வரை வசதியாக, நகராட்சி சார்பில் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து செட்டில்மென்ட் பகுதியிலும் கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும். விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவவாறு கூறினர்.
அதிகாரிகள் பேசியதாவது:
பழங்குடியின மக்களின் நலன் கருதி, 2006 வன உரிமை சட்டத்தின் படி நகராட்சி சார்பில் அனைத்து செட்டில்மென்ட் பகுதிகளிலும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். குறிப்பாக, வாகனங்கள் சென்று வர வசதியாக ரோடு, தெருவிளக்கு வசதிகள் உடனடியாக செய்து தரப்படும்.
அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் குறித்த நேரத்தில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும். மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
கிராம சபைக்கூட்டத்தில், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் செந்தில்குமார், வனத்துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள், செட்டில்மென்ட் மூப்பன்கள் கலந்து கொண்டனர்.

