/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு இருக்குமா?
/
ஊராட்சிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு இருக்குமா?
ADDED : ஜன 03, 2025 10:58 PM
பெ.நா.பாளையம்; தமிழகம் முழுவதும் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. தற்போதுள்ள ஊராட்சிகளின் பதவிக்காலத்தை அரசு நீட்டிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2019ம் ஆண்டில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றையும் சேர்த்து, 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில், ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த, 2019ம் ஆண்டு டிச.,ல் தேர்தல் நடந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி தலைவர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் ஜன., 6ல், 2020ம் ஆண்டு பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை ஜன., 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் தற்போது வரை தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஊரக உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவில்லை. இதையடுத்து கொரோனா பெருந்தொற்றால் ஊராட்சிகளில் இரண்டு ஆண்டுகள் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் போதுமான அளவு மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.
எனவே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவி காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். இதை அரசு ஏற்காத நிலையில், உடனடியாக உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வேண்டும் என, உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதை தமிழக அரசு பரிசீலனை செய்து, செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் இடையே ஏற்பட்டுள்ளது.