/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மைவாடி ஸ்டேஷனில் திருச்செந்துார் ரயில் நிற்குமா?
/
மைவாடி ஸ்டேஷனில் திருச்செந்துார் ரயில் நிற்குமா?
ADDED : ஆக 19, 2025 09:35 PM

மடத்துக்குளம்:
மைவாடி ரயில்வே ஸ்டேஷனில், திருச்செந்துார் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் மைவாடி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷன் அருகில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. அந்த ஆலை இயங்கிய போது, மைவாடி ஸ்டேஷன் பயன்பாடு அதிகளவு இருந்தது.
அகல ரயில் பாதை பணிகள் துவங்கும் முன், திண்டுக்கல் மீட்டர் கேஜ் பாதையில், ராமேஸ்வரம் உள்ளிட்ட பயணியர் ரயில் மைவாடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று சென்றது. இதனால், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர்.
அகல ரயில்பாதை பணிகளுக்கு பிறகு தற்போது, மதுரை - கோவை பயணியர் ரயில் மட்டுமே நிற்கிறது. பிற ரயில்கள் எதுவும் நிற்பதில்லை. இதனால், இந்த ஸ்டேஷனை மிக குறைவான மக்களே பயன்படுத்தி வருகின்றனர்.
நாள்தோறும், 10க்கும் குறைவான பயணியரே இந்த ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மைவாடி சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், திருச்செந்துார் பயணியர் ரயில் மைவாடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல, மதுரை ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், உடுமலைக்கு சென்று, திருச்செந்துார் ரயிலில் முண்டியடித்து ஏறுவது தவிர்க்கப்படும்,' என்றனர்.