ADDED : ஆக 12, 2026 03:00 PM
கிணத்துக்கடவு: கோதவாடியில் இருந்து, வடசித்தூர் செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், வடசித்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கின்றனர். கோதவாடி முதல் வடசித்தூர் வரை, 7 கி.மீ.,க்கு பஸ் வசதி இல்லாததால், காலை மற்றும் மாலை நேரத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து வாகனங்களில் அழைத்து செல்கின்றனர். சில நேரங்களில், அந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களில், ‘லிப்ட்’ கேட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, பள்ளி மாணவர்கள் நலன் கருதி, காலை மற்றும் மாலை நேரத்தில் கோதவாடியில் இருந்து வடசித்தூருக்கு அரசு பஸ் இயக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கூறுகையில், ‘கோதவாடி – வடசித்தூர் இடையே பஸ் வேண்டும் என, பலமுறை முகாம்களில் மனு கொடுத்துள்ளோம். இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. பஸ் இயக்கினால் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்,’ என்றனர்.
