ADDED : ஜூலை 03, 2026 04:29 AM
கோவை: கோவைக்கான 'மாஸ்டர் பிளான்' (முழுமை திட்டம்) வெளியிட்டு ஓராண்டு ஆகிறது. வழக்கமாக நகரின் எதிர்கால வளர்ச்சியை கணக்கிட்டு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 10 ஆண்டுக்கு ஒருமுறை 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்படும். கோவையில் 1994க்கு பின் அப்படி எதுவும் நடக்கவில்லை.
தொழில்துறையினர், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், 2025 ஜூலை 4ல் அன்றைய முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர் பிளான் வெளியிட்டார். 57 ஆயிரம் கோடிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த அதில் பரிந்துரைகள் சொல்லப்பட்டன. ஆனால், 'மாஸ்டர் பிளான்' புத்தகம் வெளியிட்டதோடு சரி, பிறகு எதுவும் நடக்கவில்லை.
இப்போதே போக்குவரத்து, சாலைகள், வாகனங்கள், குடிநீர், குப்பை, மின்சாரம் என பல பிரச்னைகளால் கோவை மூச்சு திணறுகிறது. ஒரே ஒரு உதாரணம் காந்திபுரம் போதும். நகரின் 7 பஸ் ஸ்டாண்ட்களில் 4 காந்திபுரத்தில் உள்ளன.அவற்றை பயன்படுத்தும் மக்கள் எல்லா நேரமும் அலைமோதுகிறார்கள். காந்திபுரத்தை விட்டு வெளியேறும் வரையில் எல்லா பஸ்களும் ஊர்ந்து செல்கின்றன; அல்லது நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றுகின்றன.
மற்ற வாகனங்களை ஓட்டுபவர்கள் இப்போதெல்லாம் ஆரன் அடிப்பதையே நிறுத்தி விட்டார்கள். என்ன அடித்தாலும் யாரும் வழி விட போவதில்லை என்கிற சலிப்பு தான். விரக்தி தான்.
நீலாம்பூரில் பல்வகை போக்குவரத்து மையம் அமைக்கவும், வடக்கு நோக்கி செல்லும் பஸ்களுக்கு விளாங்குறிச்சியிலும், தெற்கு நோக்கி செல்லும் பஸ்களுக்கு செட்டிபாளையத்திலும் பஸ் ஸ்டாண்ட் கட்ட மாஸ்டர் பிளானில் பரிந்துரை செய்திருந்தனர். அதற்கு அரசு இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கப்பட்டது; தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்டது. தற்போது த.வெ.க. ஆட்சியில் உயிரூட்ட முயற்சி நடக்கிறது. செட்டிபாளையத்தில் உருவாக்க பரிந்துரைத்த பஸ் ஸ்டாண்ட்டை வெள்ளலுாரில் கட்டலாம். தெற்கே செல்லும் பஸ்களுக்கு வசதியாக இருக்கும்.
வடக்கே போகும் பஸ்களுக்கு விளாங்குறிச்சி தான் சரியான தேர்வு. அனைத்து வசதிகளும் கொண்ட போக்குவரத்து மையம் உருவாக்க பொருத்தமான இடமும் நீலாம்பூர் தான். விமான நிலைய விரிவாக்கத்தில், நீலாம்பூரில் பிரதான நுழைவாயில் அமையும்; நீலாம்பூர் - மதுக்கரை புறவழி சாலையில் இன்னொரு நுழைவாயில்அமையும். இதே பகுதியில் மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் மெட்ரோ பணிமனை உருவாக்கவும் பரிந்துரை இருப்பதால், புறவழி சாலையை ஒட்டி பல்வகை போக்குவரத்து மையம் உருவாவது அவசியம்.
விமான நிலைய விரிவாக்கம் முடியும்போது, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் உருவாக்கி இருந்தால், பயணிகளுக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி இருக்காது. எனவே, ஆம்னி பஸ் ஸ்டாண்ட், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், சரக்கு முனையம் ஆகியவை அடுத்தடுத்து வரும் வகையில் பிரமாண்ட கட்டமைப்பை நீலாம்பூரில் உருவாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பை புதிய அரசு உடனே தொடங்க வேண்டும்.
